This Article is From Jan 13, 2020

பொங்கலன்று மத்திய அரசு அலுவலகங்களில் ஆய்வு செய்வதா? மு.க.ஸ்டாலின் கண்டனம்

மத்திய அரசு அலுவலங்களில் பொங்கல் விடுமுறை நாட்களான ஜன.14, 15, 16 ஆகிய தேதிகளில் நாடாளுமன்ற ஆட்சி மொழிக் குழு ஆய்வு செய்ய உள்ளது.

பொங்கலன்று மத்திய அரசு அலுவலகங்களில் ஆய்வு செய்வதா? மு.க.ஸ்டாலின் கண்டனம்

அதிகாரிகளின் ஆய்வு மத்திய அரசின் ஊழியர்களுக்கு வேதனையை அளித்துள்ளது.

பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும் 3 நாட்களும் மத்திய அரசு அலுவலகத்தில் ஆய்வு என மத்திய அரசு அறிவித்துள்ளது கண்டனத்திற்குரியது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

சென்னையில் உள்ள மத்திய அரசு அலுவலங்களில் பொங்கல் விடுமுறை நாட்களான ஜன.14, 15, 16 ஆகிய தேதிகளில் நாடாளுமன்ற ஆட்சி மொழிக் குழு ஆய்வு செய்ய உள்ளது. மத்திய அரசு அலுவல் மொழியாக இந்தி பயன்படுத்தப்படுவதை நேரடியாக ஆய்வு செய்து அது தொடர்பாக, குழுவின் தலைவருக்கு அறிக்கை அளிப்பது, புதிய பரிந்துரைகள் வழங்குவது குழுவின் நோக்கம்.

இந்நிலையில் இக்குழு இன்று சென்னை வந்துள்ளது. இக்குழு மத்திய அரசு அலுவலகங்களில் தனது ஆய்வை வரும் ஜன.14, 15,16 தேதிகளில் நடத்துகிறது. தமிழ்நாட்டில் பொங்கல் திருநாள் இந்த 3 நாட்களிலும் விசேஷமாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்நிலையில் அதிகாரிகளின் ஆய்வு மத்திய அரசின் ஊழியர்களுக்கு வேதனையை அளித்துள்ளது.

இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் இதுகுறித்து தனது முகநூல் பதிவில் கூறியதாவது, 

“தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் 'இந்தி மொழிப் பயன்பாடு' குறித்து ஆய்வு செய்ய, மத்திய நாடாளுமன்ற ஆட்சி மொழிக் குழு பொங்கல் திருநாள் கொண்டாடப்படும் ஜனவரி 14, 15, 16 ஆகிய தேதிகளில் வருவது கடும் கண்டனத்திற்கு உரியது.

தமிழர்களின் தன்மான உணர்வுக்கும், மொழி உணர்வுக்கும், கலாச்சார மற்றும் பண்பாட்டு உணர்வுக்கும் மதிப்பளித்து, பொங்கல் விடுமுறை நாட்களில் நடைபெறும் இந்த ஆய்வை ரத்து செய்து, தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலக ஊழியர்கள் நிம்மதியாக பொங்கல் திருநாளைக் கொண்டாட வழிவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

.