This Article is From Aug 18, 2018

கேரளா வெள்ளத்தை பார்வையிட கொச்சி வந்தடைந்தார் பிரதமர் மோடி: 10 ஃபேக்ட்ஸ்

கடந்த நூற்றாண்டில் இல்லாத அளவுக்கு கேரள மாநிலத்தில் கன மழை பெய்து வருகிறது

கேரளா வெள்ளத்தை பார்வையிட கொச்சி வந்தடைந்தார் பிரதமர் மோடி: 10 ஃபேக்ட்ஸ்
New Delhi:

கடந்த நூற்றாண்டில் இல்லாத அளவுக்கு கேரள மாநிலத்தில் கன மழை பெய்து வருகிறது. மழை காரணமாக அம்மாநிலத்தில் பலி எண்ணிக்கை 324 ஆக உயர்ந்துள்ளது என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். மீண்டும் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 2 லட்சம் மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில் நேற்று பிரதமர் நரேந்திர மோடி,  கேரளா வந்தார். தற்போது அவர் வெள்ள பாதிப்புகளை ஹெலிகாப்டர் மூலம் பார்வையிடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

10 ஃபேக்ட்ஸ்:

கேரளா, அதன் வரலாற்றில் இதைப் போன்ற வெள்ளத்தை கண்டதில்லை. 324 பேர் இறந்துள்ளனர். 223139 பேர், 1500-க்கும் மேற்பட்ட நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் ட்விட்டர் பக்கத்திலிருந்து பதிவிடப்பட்டுள்ளது.

இதுவரை, 42 கடற்படை குழு, 16 ராணுவ குழு, 28 கடலோர காவல்படை குழு, 39 தேசிய பேரிடர் மீட்புக் குழு மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. 

‘நான் ராணுவத் துறை அமைச்சரிடம் பேசினேன். இன்னும் நிறைய ஹெலிகாப்டர் வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளேன். சில இடங்களில் ஹெலிகாப்டர் மூலம் மக்களை மீட்பது மட்டும் தான் ஒரே வழியாக இருக்கிறது’ என்று பினராயி விஜயன் கூறியுள்ளார். 

பெரியாறு ஆற்றிலிருந்து வெளியேறும் வெள்ள நீரால், எர்ணாகுளம் மற்றும் திருச்சூரின் பல பகுதிகளில் மூழ்கியுள்ளன. ஆலப்புழா, எர்ணாகுளம், பட்டணம்திட்டா, திருச்சூர் மாவட்டங்களில் மக்கள் மரத்தின் மீதும் வீட்டுக் கூரையின் மீதும் ஏறி, தங்களைக் காப்பாற்றுவதற்காக காத்திருக்கிறார்கள். இந்த மாவட்டங்களில் இருக்கும் சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நேற்று பிரதமர் மோடி, ‘நான் கேரள முதல்வரிடம் போனில் பேசினேன். அங்கு இருக்கும் நிலைமை குறித்து கேட்டறிந்தேன். இன்று மாலை நான் அங்கு விரைந்து, வெள்ள பாதிபுக்களை பார்வையிட உள்ளேன்’ என்று ட்வீட் செய்திருந்தார். 

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய இடங்களில் இருக்கும் வெளிநாடு வாழ் கேரள மக்கள், தங்கள் உறவினர்களுக்கு உதவும்படி சம்பந்தப்பட்ட அதிகார அமைப்புகளிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

தொலைத்தொடர்பு துறையினர், இன்னும் ஒரு வாரத்துக்கு கேரளாவில் இலவச டேட்டா மற்றும் கால் வசதி கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

பட்டணம்திட்டாவில் இருக்கும் நூற்றுக்கணக்கான மீனவர்கள், ஹெலிகாப்டர் மூலம் நடத்தப்படும் மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவி வருகின்றனர். 

கடந்த 8 ஆம் தேதி முதல் கேரளாவில் கனமழை பெய்து வருகிறது. 
 

.