This Article is From Aug 08, 2018

தோல்வியை சந்திக்காத விழா நாயகன் - கருணாநிதி தமிழக அரசியலின் சகாப்தம்

முத்துவேல் கருணாநிதி, தமிழகத்தின் அரசியலில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக ஆதிக்கம் செய்த தலைவர்

New Delhi:

முத்துவேல் கருணாநிதி, தமிழகத்தின் அரசியலில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக ஆதிக்கம் செய்த தலைவர். தமிழகத்தை 5 முறை முதலமைச்சராக இருந்து ஆட்சி செய்தவர். கரகரக் குரலும், காந்தப் பேச்சும், செந்தமிழும் இவரது அடையாளம்.

94 வயதிலும் தமிழக மக்களின் நம்பிக்கை தலைவராக இருந்தவர், இன்று நம்மிடையே இல்லை. அவரது தமிழுக்கும், கலை சிந்தனைகளுக்கும் கிடைத்த மகுடம் கலைஞர் என்ற பட்டம். திரையில் விளையாடிய அவரது கைவண்ணம், அரசியலில் அதிகாரம் செல்லுத்த முன்னோடியாக இருந்தது.

1924-ம் ஆண்டு ஜூன் 3-ம் தேதி, திருக்குவளையில் பிறந்த கலைஞர் கருணாநிதி, தந்தை பெரியாரின் கொள்கைகளால் திராவிட இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டவர்.

1953-ம் ஆண்டு கல்லக்குடியில் தண்டவாளத்தில் தலை வைத்து நடந்த போராட்டத்தின் மூலம் கருணாநிதி என்ற அந்த இளைஞன் தமிழகம் முழுவதும் அறியப்பட்டான்.

1949-ம் ஆண்டு அண்ணா தி.மு.கவை தொடங்கிய போது, அவரது கொள்கையின் பால் ஈர்க்கப்பட்டு இணைந்தார். பின் திரைத்துறையில், அரசியலிலும் பிரகாசித்தார். 1952-ம் ஆண்டு வெளியான பராசக்தி திரைப்படம், தி.மு.க தங்களது முற்போக்கு கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க திரைப்படங்களை எப்படி பயன்படுத்தியது என்பது எடுத்துக்காட்டு. தமிழ் சினிமாவில் பராசக்தி ஏற்படுத்திய தாக்கத்தை மறுக்க முடியாது. பராசக்திக்கு பின் தான் முற்போக்கு சிந்தனைகளை தமிழ் சினிமா ஏற்றுக் கொள்ளத் தொடங்கியது.

1967-ம் ஆண்டு முதன் முதலாக ஆட்சியைப் பிடித்தது தி.மு.க. அன்றிலிருந்து தமிழக அரசியலில் இருந்து பிரிக்க முடியாத சக்தியாக உருவெடுத்தது தி.மு.க. அண்ணாவின் மறைவுக்கு பிறகு 1969-ம் ஆண்டு தி.மு.கவின் தலைவராக பொறுப்பேற்றார், கலைஞர் கருணாநிதி. 50 ஆண்டுகளுக்கு முன் நடந்தது அந்த வரலாற்று நிகழ்வு. அந்த சகாப்தம் தலைவராகவே தன் கதையை முடித்துக் கொண்டது.

48 வயதில் முதல் முறையாக முதலைமைச்சரானார். அதன் பிறகு 5 முறை தமிழக முதலமைச்சராக பேராதரவுடன் ஆட்சி புரிந்துள்ளார். 1957-ம் ஆண்டு முதல் முறையாக குளித்தலையில் வென்று சட்டமன்ற உறுப்பினரானார். அன்று முதல் இன்று வரை வெற்றியை மட்டுமே சந்தித்தவர் கருணாநிதி. 13 முறை தமிழக சட்டமன்ற உறுப்பினராக வீழா நாயகனாக இருந்தவர் கருணாநிதி.

94 ஆண்டுகளாக தமிழகத்திலும், இந்திய அரசியலிலும் தனது கதிர்களை வீசிய சூரியன் இன்று மறைந்தது.
 

மேலும் படிக்க - "நானும் பத்திரிகைக்காரன்" தான்

கருணாநிதி - ஒரு சரித்திர பயணம் 

நெருப்பு தெறிக்கும் வசனங்களால் புதுமை புகுத்திய கலைஞர்! 

"ஒரே ஒரு முறை 'அப்பா' என்று அழைத்துக்கொள்ளட்டுமா" - ஸ்டாலின் உருக்கமான கடிதம்

                         

.