This Article is From Apr 27, 2020

துணை ராணுவ வீரருக்கு இந்த நிலைமையா? ஊரடங்கு விதியை மீறியதால் போலீசார் நடவடிக்கை

கடந்த 23-ம்தேதி, சச்சின் தனது வீட்டிற்கு வெளியே மாஸ்க் அணியாமல் நின்றுள்ளார். அப்போது அவரைப் பார்த்த போலீசார் 2 பேர், மாஸ்க் அணியும்படி கூறியதாகவும், இதையடுத்து இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம், கைகலப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

துணை ராணுவ வீரருக்கு இந்த நிலைமையா? ஊரடங்கு விதியை மீறியதால் போலீசார் நடவடிக்கை

துணை ராணுவ வீரர் மீதான நடவடிக்கை குறித்து வழக்கு ஒன்று நாளை விசாரணைக்கு வரவுள்ளது.

ஹைலைட்ஸ்

  • ஊரடங்கை மீறியது தொடர்பாக துணை ராணுவ வீரர் - போலீசாருக்கு இடையே மோதல்
  • ராணுவ வீரரின் கையில் விலங்கிட்டு காவல்நிலையத்தில் சிறை வைத்த போலீசார்
  • போலீஸ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என துணை ராணுவம் எச்சரிக்கை
Bengaluru:

கர்நாடகாவில் ரிசர்வ் போலீஸ் படையின் கமாண்டோ பிரிவில் பணியாற்றும் வீரர் ஒருவர் ஊரடங்கு விதிகளை மீறியுள்ளார். அவரை கைது செய்த போலீசார், கையில் விலங்கிட்டு காவல் நிலையத்தில் வைத்துள்ளனர். இதுதொடர்பான புகைப்படம் விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது.

இதுதொடர்பாக நாளை வழக்கு ஒன்று விசாரணைக்கு வரவுள்ளது. இந்த விவகாரத்தில் மாநில போலீஸ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரிசர்வ் போலீஸ் படையின் செய்தி தொடர்பாளர் மோசஸ் தினகரன் தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் சச்சின் சாவந்த். இவர் துணை  ராணுவமான ரிசர்வ் போலீஸ் படையின் கமாண்டோ பிரிவில் வீரராக உள்ளார். பொதுவாக கோப்ரா என அழைக்கப்படும் இந்த படைப்பிரிவு, நக்சல்களை ஒடுக்குவதற்காக அனுப்பி வைக்கப்படும்.

இந்த நிலையில், கடந்த 23-ம்தேதி, சச்சின் தனது வீட்டிற்கு வெளியே மாஸ்க் அணியாமல் நின்றுள்ளார். அப்போது அவரைப் பார்த்த போலீசார் 2 பேர், மாஸ்க் அணியும்படி கூறியதாகவும், இதையடுத்து இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம், கைகலப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக சச்சின் சாவந்த்தை கைது செய்த போலீசார் அவரை கை விலங்கிட்டு காவல் நிலையத்தில் வைத்திருந்தனர். இதுதொடர்பான புகைப்படங்கள் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த விவகாரம் குறித்து காவல் துறை தரப்பில் கூறப்படுவதாவது-

சச்சின் சாவந்த் சாலையில் மாஸ்க் அணியாமல் சென்று கொண்டிருந்தார். அவரிடம் மாஸ்க் அணியும்படி 2 போலீசார் கேட்டுக் கொண்டனர். அவர்களிடம் வாக்குவாதம் செய்த சச்சின், தகாத வார்தைகளால் பேசி, தான் ஒரு துணை ராணுவ வீரர் என்று கூறியுள்ளார்.

மேலும், போலீசார் கூறும் விதிமுறைகளை கடைபிடிக்க மாட்டேன் என்றும் சச்சின் வாக்குவாதம் செய்தார். இதன்பின்னர் கை கால்களால் போலீசாரை சச்சின் தாக்கினார். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற காவலில் வைத்தனர். 
இவ்வாறு போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

இந்த விவாகரம் தொடர்பாக ரிசர்வ் போலீஸ் படை அதிகாரிகள் கர்நாடக போலீஸ் தலைவர் பிரவீன் சூட்டிற்கு கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது-

ஏப்ரல் 23-ம்தேதி துணை ராணுவ வீரர் சச்சின் சாவந்தை கைது செய்யப்பட்டார். மாநில போலீசாரால் இந்த விரும்பத்தகாத நிகழ்வு நடப்பதை தவிர்த்திருக்க முடியும். 

எங்களது வீரர் அவமரியாதை செய்யப்பட்டதுடன், முரட்டுத்தனமாக தாக்கப்பட்டுள்ளார். காவல் நிலையம் வரைக்கும் அவரை வெறும் காலுடன், கைகளில் விலங்குகளை அணிவித்து போலீசார் அழைத்து வந்துள்ளனர். தான் வீட்டிற்கு வெளியேதான் நின்று கொண்டிருப்பதாகவும், இதனால்தான் மாஸ்க் அணியவில்லை என்றும் சச்சின் சாவந்த் கூறியுள்ளார். இதனை போலீசார் பொருட்படுத்தவில்லை.
இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

போலீசாரின் அராஜகம் குறித்து எதிர் வழக்கை ரிசர்வ் போலீஸ் பதிவு செய்யும் என உயர் அதிகாரிகள் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளனர்.

.