This Article is From Feb 22, 2019

‘எந்த தண்ணிய சொல்றாரு..?’- ரஜினி குறித்த கேள்விக்கு கமல் கிண்டல்

மக்கள் நீதி மய்யம் கட்சியை ஆரம்பித்து ஓராண்டு நிறைவு பெற்றதை அடுத்து, நேற்று கட்சி சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார் கமல்ஹாசன்.

‘எந்த தண்ணிய சொல்றாரு..?’- ரஜினி குறித்த கேள்விக்கு கமல் கிண்டல்

நேற்று நடந்த திருவாரூர் பொதுக் கூட்டத்தில், ‘வாரிசு அரசியலுக்கு முடிவு கட்டுவோம்’ என்று சூளுரைத்தார் கமல்

ஹைலைட்ஸ்

  • தண்ணீர் பிரச்னையை தீர்ப்பவர்களுக்கு வாக்களியுங்கள், ரஜினி
  • ரஜினி எங்களைத்தான் ஆதரிக்கிறார், அதிமுக கருத்து
  • எந்த தண்ணிய ரஜினி சொன்னாரு, கமல் கிண்டல் பேச்சு

மக்கள் நீதி மய்யம் கட்சியை ஆரம்பித்து ஓராண்டு நிறைவு பெற்றதை அடுத்து, நேற்று கட்சி சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார் கமல்ஹாசன். குறிப்பாக நேற்றிரவு திருவாரூரில் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, ‘வாரிசு அரசியலுக்கு முடிவு கட்டுவோம்' என்று சூளுரைத்தார். 

இதையடுத்து, இன்று காலை சென்னைக்கு வந்த கமல் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கூட்டணி குறித்து கேள்வி வந்தது, ‘நாங்கள் மக்களோடுதான் கூட்டணி வைத்துள்ளோம். மக்கள் நலன்தான் எங்கள் கொள்கை. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதுதான் எங்கள் நோக்கமாக இருந்து வருகிறது. ஆனால், கூட்டணியும் வைக்கக் கூடும். எங்களுடன் கூட்டணி வைப்பதென்றால், நேர்மையாளராக இருக்க வேண்டும்' என்று பதிலளித்தார். 

தொடர்ந்து ஒரு செய்தியாளர், ‘தண்ணீர் பிரச்னையைத் தீர்த்து வைப்பவருக்கு ஓட்டு போடுங்கள் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறினார். இதையடுத்து அதிமுக, ரஜினி எங்களைத்தான் ஆதரிக்கச் சொல்லி இருக்கிறார் என்று தெரிவிக்கின்றனர். இது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?' என்று கேட்டதற்கு, ‘எந்த தண்ணீர் குறித்து ரஜினி பேசியுள்ளார் என்று எனக்குத் தெரியவில்லை' என்று கேலி செய்யும் விதத்தில் பதில் கூறினார். 

சில நாட்களுக்கு முன்னர் ரஜினி,  ‘வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் எனது ஆதரவு இல்லை. நான் தொடங்கப் போகும் அரசியல் இயக்கத்தின் இலக்கு அடுத்து வரவுள்ள சட்டமன்றத் தேர்தல்தான். தமிழகத்தின் தண்ணீர் பிரச்னையை யார் தீர்த்து வைப்பார்களோ, அவர்களுக்கே மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்' என்று மக்களவைத் தேர்தல் குறித்து விளக்கம் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

.