This Article is From Mar 13, 2019

ஜெயலலிதா மரண விவகாரம் : அப்போலோ தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தது நீதிமன்றம்

சுதந்திர இந்தியாவில் ஒரு விசாரணை ஆணையம், அரசியல் தலைவர் ஒருவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை சரியானதா என்பதை முடிவு செய்வது இதுவே முதன்முறை என்று அப்போலோ நிர்வாகம் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளது.

ஜெயலலிதா மரண விவகாரம் : அப்போலோ தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தது நீதிமன்றம்

சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது.

Chennai:

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திலிருந்து தங்களது மருத்துவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு விசாரணை நிறைவு பெற்ற நிலையில், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர் நீதிமன்றம் ஒத்தி வைத்தள்ளது. 

உடல் நல குறைவு காரணமாக பாதிக்கப்பட்டிருந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், அவரது உயிர் கடந்த 2016, டிசம்பர் 5-ம் தேதி பிரிந்தது. 

இதையடுத்து ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பல்வேறு தரப்பினர் பிரச்னை எழுப்பியதை தொடர்ந்து ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒருநபர் விசாரணை கமிஷனை தமிழக அரசு ஏற்படுத்தியது. 

ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவர்களிடம் ஆறுமுகசாமி கமிஷன் விசாரணை நடத்தி வருகிறது. அவரது நண்பர்கள், அமைச்சர்கள், உறவினர்கள், உதவியாளர்கள் என பலரிடம் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்போலோ மருத்துவமனை மருத்துவர்களிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று முடிவு செய்திருந்தது. இதற்கு  அப்போலோ நிர்வாகம் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது. 

தங்களது மருத்துவர்களை ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் விசாரிப்பதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அப்போலோ நிர்வாகம் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. சுதந்திர இந்தியாவில் ஒரு விசாரணை ஆணையம், அரசியல் தலைவர் ஒருவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை சரியானதா என்பதை முடிவு செய்வது இதுவே முதன்முறை என்று அப்போலோ நிர்வாகம் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளது. 

சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கு விசாரணை நிறைவு பெற்றுள்ள நிலையில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. 
 

.