This Article is From Aug 13, 2019

ஜம்மூ காஷ்மீர் விவகாரம் மிகவும் உணர்வுப்பூர்வமானது; அரசுக்கு அவகாசம் வேண்டும்!: உச்ச நீதிமன்றம்

Article 370 Scrapped: ஆகஸ்ட் 4 ஆம் தேதி முதல் காஷ்மீர் மாநிலத்தில் மக்கள் ஒன்றாக கூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பக்ரீத் தினமான நேற்று, மக்களின் இயல்பு வாழ்க்கையில் பெரிய பாதிப்பு இல்லை என்று மத்திய அரசு விளக்கம் கொடுத்துள்ளது.

ஹைலைட்ஸ்

  • ஒரே நாளில் காஷ்மீரில் இயல்பு நிலை வராது: உச்ச நீதிமன்றம்
  • அரசு செயல்பாட்டில் நம்பிக்கை வைத்தாக வேண்டும்: நீதிமன்றம்
  • தினமும் காஷ்மீர் பிரச்னை குறித்து ஆய்வு செய்து வருகிறோம்: மத்திய அரசு
New Delhi:

ஜம்மூ காஷ்மீரில் விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட வேண்டும் என வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கு விசாரணையின்போது நீதிமன்றம், “ஜம்மூ காஷ்மீர் விவகாரம் மிகவும் உணர்ச்சிப்பூர்வமானது. அரசு இது குறித்து எடுக்கும் நடவடிக்கைகளுக்கும் காலம் வேண்டும். உடனே அங்கு அமைதியான சூழல் திரும்பிவிட வேண்டும் என்று நினைக்கிறோம். அது ஒரு நாளில் நடக்கப் போவதில்லை. அங்கு என்ன நடக்கிறது என்பது சரியாக யாருக்கும் தெரியாது” என்று கூறி வழக்கை ஒத்திவைத்தது. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து சட்டப் பிரிவு ரத்து செய்யப்பட்டதில் இருந்து அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. அம்மாநிலத்தின் பிரதான அரசியல் கட்சித் தலைவர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். 

ஆகஸ்ட் 4 ஆம் தேதி முதல் காஷ்மீர் மாநிலத்தில் மக்கள் ஒன்றாக கூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இணைய சேவையும் போன் இணைப்பும் கூட மாநிலத்தில் துண்டிக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து வழக்கு விசாரணையின்போது அரசு தரப்பில் வாதாடிய அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், “மத்திய அரசு, காஷ்மீர் பிரச்னை குறித்து தினமும் கவனித்து வருகிறது. சீக்கிரமே அங்கு நிலவி வரும் பிரச்னை தீர்க்கப்படும் என எதிர்பார்க்கிறோம். தற்போது அங்கு கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளது சட்ட ஒழுங்கைக் காக்கத்தான். 

காஷ்மீரில் புரான் வாணி உள்ளிட்ட 3 தீவிரவாதிகள் கடந்த 2016 ஆம் ஆண்டு, ஜூலை மாதம் கொல்லப்பட்டபோதும் இப்படித்தான் நிலைமை இருந்தது. மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தினார்கள். அப்போதும், இணைய சேவை துண்டிக்கப்பட்டது. 40-க்கும் மேற்பட்டோர் கொலப்பட்டனர். ஆனால், தற்போது ஒருவர் கூட கொல்லப்படவில்லை” என்று வாதாடினார். 

இதைக் கேட்ட 3 பேர் கொண்ட நீதிமன்ற அமர்வு, “நமக்கு காஷ்மீரில் இருக்கும் உண்மைநிலை குறித்துத் தெரிய வேண்டும். அதற்கு கண்டிப்பாக காலமாகும். அங்கு இயல்பு நிலைத் திரும்பட்டும். இதே நிலை நீடித்தால் மனுதாரர் நீதிமன்றத்தை நாடலாம்” என்றது. 

பக்ரீத் தினமான நேற்று, மக்களின் இயல்பு வாழ்க்கையில் பெரிய பாதிப்பு இல்லை என்று மத்திய அரசு விளக்கம் கொடுத்துள்ளது. ஆனால் ஸ்ரீநகரின் தெருக்கள் வெறிச்சோடியே காணப்பட்டன. அங்கு பாதுகாப்புப் படையினர் பல்லாயிரக்கணக்கில் குவிக்கப்பட்டுள்ளனர். 

.