பல மாதங்களாக வீட்டுச் சிறையில் உள்ள ஜம்மூ காஷ்மீர் தலைவர்கள்; Amit Shah கொடுத்த புதிய விளக்கம்!

"“காஷ்மீர் பள்ளத்தாக்கில் அனைத்தும் சுமூகமாக உள்ளது"- Amit Shah

பல மாதங்களாக வீட்டுச் சிறையில் உள்ள ஜம்மூ காஷ்மீர் தலைவர்கள்; Amit Shah கொடுத்த புதிய விளக்கம்!

காஷ்மீரில் அனைத்தும் சுமூகமாக இருக்கிறது என்றும் ஒரு குண்டு கூட பயன்படுத்தப்படவில்லை என்றும் உறுதியளித்தார் Amit Shah

New Delhi:

ஜம்மூ காஷ்மீரில் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கட்சித் தலைவர்களை, உள்ளூர் நிர்வாகம் விடுதலை செய்யும் என்றும், ‘மத்திய அரசின் தலையீடு இல்லை' என்றும் உள்துறை அமித்ஷா நாடாளுமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளார். 

ஜம்மூ காஷ்மீரின் முன்னாள் முதல்வர்கள் மெஹ்பூபா முப்டி, ஒமர் அப்துல்லா மற்றும் ஃபரூக் அப்துல்லா உள்ளிட்டோர் கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர். அதே நாளில்தான் ஜம்மூ காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து சட்டப் பிரிவான 370 ரத்து செய்யப்பட்டு, அது 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. 

இந்நிலையில், வீட்டுச் சிறையில் உள்ள ஜம்மூ காஷ்மீர் தலைவர்களை எப்போது விடுதலை செய்யப்படுவார்கள் என்று மக்களவையில் காங்கிரஸ் கேள்வியெழுப்பியது. அதற்கு அமித்ஷா, “யாரையும் தேவைக்கு அதிகமாக ஒரு நாள் கூட சிறையில் வைத்திருக்க வேண்டிய விருப்பம் அரசுக்கு இல்லை. அங்கிருக்கும் உள்ளூர் நிர்வாகத்தினர் அவர்களை எப்போது விடுதலை செய்தால் சரியாக இருக்கும் என்று நினைக்கிறார்களோ, அப்போது விடுதலை செய்வார்கள். எங்கள் தரப்பிலிருந்து எந்தவித தலையீடும் இருக்காது. நீங்கள்தான், அப்படி தலையீடு செய்பவர்கள். அது எங்களின் பாணி அல்ல,” என்று பதில் அளித்தார். 

அவர் காங்கிரஸ் தரப்பை மேலும் சாடி, “ஃபரூக் அப்துல்லாவின் தந்தையான ஷேக் அப்துல்லாவை 11 ஆண்டுகள் சிறை வைத்திருந்தது காங்கிரஸ் தலைமையிலான ஆட்சிதான்,” என்றார்.

மேலும், காஷ்மீரில் அனைத்தும் சுமூகமாக இருக்கிறது என்றும் ஒரு குண்டு கூட பயன்படுத்தப்படவில்லை என்றும் உறுதியளித்தார். 

“காஷ்மீர் பள்ளத்தாக்கில் அனைத்தும் சுமூகமாக உள்ளது. ஆனால், சட்டப் பிரிவு 370 ரத்துக்குப் பின்னர் காங்கிரஸ், காஷ்மீரில் ரத்த ஆறு ஓடும் என்று கணித்தது. அதைப் போல எதுவும் நடக்கவில்லை. ஒரு குண்டு கூட பயன்படுத்தப்படவில்லை,” என்றார் அமித்ஷா தீர்க்கமாக.

ஜம்மூ காஷ்மீரைச் சேர்ந்த 99.5 சதவிகித மாணவர்கள் தேர்வுகளை எழுதியுள்ளார்கள் என்றும் ஸ்ரீநகரில் இருக்கும் மருத்துவமனைக்கு 7 லட்சம் பேர் வந்துள்ளார்கள் என்றும் தரவுகளை நாடாளுமன்றத்தில் வாசித்தார் அமித்ஷா.