This Article is From Dec 30, 2019

‘சூரியனை ஆய்வு செய்ய செயற்கைகோளை அனுப்புகிறது இஸ்ரோ’ - பிரதமர் மோடி தகவல்!!

வானியல் துறையில் இந்தியா மிகவும் முன்னேறியுள்ளதாக குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, இந்த துறையில் இந்தியா பல புதுமைகளை செய்துள்ளதாக புகழாரம் சூட்டினார்.

‘சூரியனை ஆய்வு செய்ய செயற்கைகோளை அனுப்புகிறது இஸ்ரோ’  - பிரதமர் மோடி தகவல்!!

மிகவும் சக்தி வாய்ந்த தொலைநோக்கிகளை பல்வேறு இடங்களில் இந்தியா கொண்டுள்ளதாக மோடி கூறியுள்ளார்.

New Delhi:

2019-ம் ஆண்டின் கடைசி மன் கி பாத் உரையை இன்று நிகழ்த்திய பிரதமர் மோடி, இஸ்ரோவின் திட்டம் குறித்த முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். சூரியனை ஆய்வு செய்வதற்காக செயற்கை கோளை அனுப்புவதற்கு இஸ்ரோ திட்டமிட்டுள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதற்கு ஆதித்யா என்று பெயர் சூட்டப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

மன் கி பாத் உரையில் பிரதமர் மோடி கூறியதாவது-

வானியல் துறையில் இந்தியா மிகவும் முன்னேறியுள்ளது. இந்த துறையில் நாம் பல புதுமைகளை செய்திருக்கிறோம். வானியல் ரீதியிலான ASTROSAT என்ற செயற்கைகோளை இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ கொண்டுள்ளது. இதனை தவிர்த்து சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா என்ற செயற்கை கோளையும் இஸ்ரோ செலுத்தவிருக்கிறது.

இந்தியாவில் பல்வேறு சக்தி மிக்க தொலை நோக்கிகள் பல்வேறு இடங்களில் உள்ளன. புனே அருகில் பிரமாண்டமான தொலைநோக்கி உள்ளது. இதேபோன்று கொடைக்கானல், ஊட்டி, குரு ஷிகார், லடாக் ஆகிய பகுதிகளில் சக்தி மிக்க தொலை நோக்கிகள் நிறுவப்பட்டுள்ளன.

2016-ம் ஆண்டில் அப்போதைய பெல்ஜிய பிரதமரும் நானும் சேர்ந்து, 3.6 மீட்டர் நீளம் கொண்ட தொலைநோக்கியை நைனிடால் நகரில் நாட்டுக்கு அர்ப்பணித்தோம். இது ஆசியாவிலேயே மிகப்பெரும் தொலைநோக்கியாக கருதப்படுகிறது.

இந்தியர்கள் இந்தியாவின் வானியல் வரலாற்றையும், தற்காலத்தில் நமது அரசு செய்து கொண்டிருக்கும் வானியல் துறை சாதனைகளையும் அறிந்து கொள்ள வேண்டும். நம் நாட்டின் இளம் விஞ்ஞானிகள் நமது வானியல் வரலாற்றை அறிந்து கொள்வதற்கு ஆர்வம் காட்டுவதுடன், வானியலின் எதிர்காலம் குறித்தும் தீர்மானம் கொண்டிருக்க வேண்டும்.

வானில் நட்சத்திரங்களை உற்றுநோக்கும் அதே வேளையில், கிராமப்புறங்களுக்கு சுற்றுலா சென்று அங்கு முகாமிட வேண்டும். பள்ளிகள், கல்லூரிகள் மட்டத்தில் வானியல் குழுக்களை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

நாம் நிறுவியுள்ள வானியல் மையங்கள், நட்சத்திரங்களை பார்ப்பதற்கு மட்டுமின்றி, மக்களுக்குள் பேரார்வத்தையும விதைக்கின்றன. இதன் விளைவாக பலர் தங்களது வீடுகளின் மொட்டை மாடியில் சிறிய அளவிலான தொலைநோக்கிகளை நிறுவியுள்ளதை காண முடிகிறது.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

.