This Article is From Jul 30, 2018

அமெரிக்க எதிர்க்கட்சி தலைமை செயல் அதிகாரியாக இந்திய பூர்வீகப் பெண்

ஜனநாயக கட்சி தேசிய கமிட்டியின் தலைமை செயல் அதிகாரியாக இந்திய பூர்வீகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் நியமிக்கப்படுவது இதுவே முதல் முறை

அமெரிக்க எதிர்க்கட்சி தலைமை செயல் அதிகாரியாக இந்திய பூர்வீகப் பெண்
Washington, US:

அமெரிக்க எதிர்கட்சியான ஜனநாயக கட்சியின் தேசிய கமிட்டி தலைமை செயல் அதிகாரியாக இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட சீமா நந்தா தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜனநாயக கட்சி தேசிய கமிட்டியின் தலைமை செயல் அதிகாரியாக இந்திய பூர்வீகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் நியமிக்கப்படுவது இதுவே முதல் முறை.

தேச நலனுக்காக அற்பணிப்புடன் போராடுவேன் என்றும், வரும் இடைத் தேர்தலில் அமெரிக்காவின் அனைத்து பகுதிகளிலும், ஜனநாயகக் கட்சி வெல்வதை உறுதி செய்ய உழைப்பேன் என்றும் அவர் உறதியேற்றுள்ளார். இனி, அந்த கட்சியின் தேசிய கமிட்டியின், தினசரி செயல்பாடுகளுக்கு சீமா பொறுப்பாளர் ஆகிறார். நவம்பர் மாதம் நடக்க இருக்கும் தேர்தலில் வெற்றிப் பெறுவதே சீமாவின் உடனடி இலக்காக இருக்கும். இந்த தேர்தலில் வென்றால், அமெரிக்க காங்கிரஸில் ஜனநாயக கட்சியால் அதிகாரத்தை திரும்பப் பெற முடியும்.

“ டிரம்ப் அதிபர் ஆனதில் இருந்து, நாட்டை நல் வழிக்கு மீண்டும் கொண்டு வர, ஜனநாயக கட்சி திரும்ப அதிகாரத்துக்கு வருவதே ஒரே வாய்ப்பு. அதை உணர்ந்ததால் தான், நான் இந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டேன்” என தெளிவான நோக்கத்தோடு பேசுகிறார் சீமா.

மேலும் “ நவம்பர் தேர்தலை மையமாக வைத்து, எங்கள் இலக்குகளை நீட்டித்துள்ளோம். அதன் மூலம் எங்கள் கட்சி வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்வோம்” என்கிறார் நம்பிக்கையாக.

சீமாவின் பெற்றோர், பல் மருத்துவர்கள். கனெக்டிகட் என்ற இடத்தில் வளர்ந்தவர். பிரவுன் பல்கலைக்கழகம் மற்றும் பாஸ்டன் சட்டக் கல்லூரியில் பயின்றவர். தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு சட்டமும் பயின்றவர். மேலும், நீதித் துறையின், மக்கள் உரிமை துறையில் பணியாற்றியும் இருக்கிறார்.

.