This Article is From Nov 05, 2019

ஆசிய வர்த்தக ஒப்பந்தமான RCEP-ல் இந்தியா இணையாது: பிரதமர் மோடி திட்டவட்டம்!

RCEP Deal - இந்த ஆர்சிஈபி ஒப்பந்தம் குறித்து காங்கிரஸின் ராகுல் காந்தியும் இன்று ட்விட்டர் மூலம் தனது எதிர்ப்பினைத் தெரிவித்திருந்தார்.

RCEP Deal - ஆர்சிஈபி திட்டம் அமலுக்கு வந்தால், சீனாவின் பொருட்கள், இந்தியச் சந்தைகளில் மிகவும் எளிதாக வந்துவிடும் என்று நாட்டில் பல தரப்பினரும் சொல்லி வந்தனர்.

New Delhi:

இந்தியா, Regional Comprehensive Economic Partnership என்றழைக்கப்படும் ஆர்சிஈபி-யில் இணையாது என்று பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். முன்னதாக இந்த ஆர்சிஈபி ஒப்பந்தத்தில் இணைய, இந்தியா, அனைத்து தரப்பும் பயனடையும் வகையில் விதிகளில் திருத்தம் செய்யச் சொல்லியிருந்தது. இந்தத் திட்டத்தில் இந்திய தரப்பு இணைந்திருந்தால், 16 நாடுகளுக்கு இடையில் சுதந்திரமாக வர்த்தகம் செய்வது நடைமுறைக்கு வந்திருக்கும். உலகின் மிகப் பெரிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தமாகவும் அது இருந்திருக்கும். 

இந்தியா இல்லாமலும் இந்த ஒப்பந்தத்தில் மற்ற நாடுகள் கையெழுத்திடும் என்றுதான் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தில் அங்கம் வகிக்கும் சீனா, அமெரிக்காவுடன் தொடர்ந்து வர்த்தகப் போரில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த வர்த்தகப் போரினால், கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குச் சீனாவின் பொருளாதார வளர்ச்சி சரிந்துள்ளது. 

இந்த ஆர்சிஈபி ஒப்பந்தத்தில் இணையாதது குறித்து பிரதமர் மோடி, “தற்போது இருக்கும் ஆர்சிஈபி, எங்கள் விருப்பங்களை பிரதிபலிக்கும் வகையில் இல்லை. நான் ஆர்சிஈபி-ஐ என்னுடைய நாட்டின் குடிமக்களின் தேவையோடு ஒப்பிட்டுப் பார்த்தால், நேர்மறையான பதில் கிடைக்கவில்லை. அதனால் இதில் இணைய என் மனம் இடம் கொடுக்கவில்லை,” எனத் தெரிவித்தார். 

ஆர்சிஈபி திட்டம் அமலுக்கு வந்தால், சீனாவின் பொருட்கள், இந்தியச் சந்தைகளில் மிகவும் எளிதாக வந்துவிடும் என்று நாட்டில் பல தரப்பினரும் சொல்லி வந்தனர். இப்படி ஆர்சிஈபி-யில் உள்ள பல்வேறு பிரச்னைகள் குறித்து ASEAN மாநாடு நடக்கும்போது, 16 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிகள் பேசித் தீர்க்க முயன்றுள்ளனர். ஆனால், அவர்களின் முயற்சி உருபெறவில்லை. 

இந்த ஆர்சிஈபி ஒப்பந்தம் குறித்து காங்கிரஸின் ராகுல் காந்தியும் இன்று ட்விட்டர் மூலம் தனது எதிர்ப்பினைத் தெரிவித்திருந்தார். பாஜக-வின் கொள்கை மூளையாக செயல்படும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் ஆர்சிஈபி-க்கு எதிராகத்தான் நிலைப்பாட்டை எடுத்துள்ளது. 

“இந்தியாவில் பெரும் பொருளாதாரச் சுணக்கம் நிலவுகிறது. கடந்த 6 ஆண்டு பாஜக ஆட்சியில் 90 லட்சம் பேர் வேலைவாய்ப்பை இழந்துள்ளார்கள். ஆர்சிஈபி, இந்த நிலையை பன்மடங்கு மோசமாக்கும். ஆர்சிஈபி-யில் இந்தியா இணைய இதுவே மிக மோசமான நேரமாகும்,” என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். 

ஆர்சிஈபி-யில் ASEAN அமைப்பைச் சேர்ந்த 10 நாடுகள் மற்றும் 6 FTA (Free Trade Agreement) பார்ட்னர் நாடுகள் உள்ளன. சீனா, இந்தியா, ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகியவையே அந்த 6 நாடுகள். 

.