615 கிலோ எடை கொண்ட ரிசாட்-2பி என்னும் இந்த செயற்கைக்கோளை இஸ்ரோ அமைப்பு இன்று வெற்றிகரமாக ஏவியுள்ளது
ஹைலைட்ஸ்
- “மிக அற்புதமாக விண்ணில் ஏவப்பட்டது” என்று கூறியுள்ளார் கே.சிவன்
- RISAT-2B செயற்கைக் கோள்தான் விண்ணில் ஏவப்பட்டுள்ளது
- இன்று அதிகாலை செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது
மேகமூட்டத்தையும் தாண்டி, துள்ளியமாக கண்காணிக்கும் அதி நவீன ‘உளவு செயற்கைக்கோளை' இந்தியா, விண்ணில் வெற்றிகரமாக ஏவியுள்ளது.
615 கிலோ எடை கொண்ட ரிசாட்-2பி என்னும் இந்த செயற்கைக்கோளை இஸ்ரோ அமைப்பு இன்று வெற்றிகரமாக ஏவியுள்ளது. இந்த செயற்கைக்கோள் மூலம் இரவு, பகல் மற்றும் மோசமான வானிலையின் போதும் துள்ளியமாக நிலபரப்பை கண்காணிக்க முடியும். இது குறித்து இன்று அதிகாலை 5:30 மணி அளவுக்கு இஸ்ரோ தலைவர் கே.சிவன், “மிக அற்புதமாக விண்ணில் ஏவப்பட்டது” என்று கூறினார்.
ஏவுகணை விண்ணில் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்திய ராணுவத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், “வெல் டன் இஸ்ரோ. நீங்கள் எங்களை மீண்டும், மீண்டும் பெருமை கொள்ள வைக்கிறீர்கள். அனைத்து வானிலைகளின் போதும், நமது கண்களாக இந்த செயற்கைக்கோள் இருக்கும்.” என்று ட்விட்டர் மூலம் பாராட்டு தெரிவித்திருந்தார்.
Well done @isro. You make us proud, again and again. They shall be our eyes in the sky above - all weather. https://t.co/WGHe7xFchB
— Chowkidar Nirmala Sitharaman (@nsitharaman) May 22, 2019
இந்த செயற்கைகோள் மூலம் வழக்கத்துக்கு மாறாக ஏதாவது நடந்தால் அது கண்காணிக்கப்படும். அதேபோல விவசாய நிலங்கள், வனங்களையும் இது கண்காணிக்கும். மற்றும் பேரிடர் நடக்கக் கூடிய இடங்களையும் நோட்டமிடும். இந்த செயற்கைக்கோள் குறித்தான புகைப்படங்களை இஸ்ரோ வெளியிடவில்லை.
முன்னதாக பிப்ரவரி 26 ஆம் தேதி, இந்திய விமானப் படையைச் சேர்ந்த விமானங்கள், எல்லைத் தாண்டி, பாகிஸ்தானில் இருக்கும் பாலகோட்டிற்கு சென்றன. அப்போது அங்கு இயங்கி வந்த தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தின. அந்த நேரத்தில் வானிலை மோசமாக இருந்ததால், இந்த தாக்குதல் குறித்தான படமோ, வீடியோவோ கிடைக்கவில்லை. இதனால், இந்த தாக்குதலின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுந்தது. இந்நிலையில், இனி அதைப் போன்று தாக்குதல் நடத்தினால், தற்போது ஏவப்பட்டுள்ள அதி நவீன செயற்கைக்கோள், படங்களை எடுக்கும் என்று கூறப்படுகிறது.
அடுத்ததாக இஸ்ரோ அமைப்பு, சந்திராயன்-2 மிஷனை மேற்கொள்ள உள்ளது. வரும் ஜூலை 9 முதல் 16 ஆம் தேதிக்குள் இந்த மிஷன் செயல்படுத்தப்படும். இந்த மிஷன் மூலம் இந்தியா, நிலவின் மேற்பரப்பில் ரோபோ ஒன்றை தரையிறக்க முயற்சி மேற்கொண்டுள்ளது.
இது குறித்து சிவன், “சந்திராயன்-2 மிஷன் மூலம், நாம் இதுவரை யாரும் செல்லாத இடத்துக்குச் செல்வோம். அதுதான் நிலவின் தென் துருவம்” என்று கூறியுள்ளார்.