This Article is From Feb 17, 2019

பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கத் தொடங்கிய இந்தியா – வர்த்தகத்தில் கை வைத்தது

ஜம்மு காஷ்மீரில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தனர். இதற்கு பாகிஸ்தானை மையமாக கொண்டு செயல்படும் ஜெய்ஷ் இ முகம்மது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

வர்த்தகம் செய்ய ஏற்ற நாடு என்று பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டிருந்த அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.

ஹைலைட்ஸ்

  • மத்திய அரசின் பதிலடியால் ரூ. 3 ஆயிரம் கோடிக்கு பாக்.க்கு இழப்பு ஏற்படும்
  • உலக நாடுகள் பாகிஸ்தானுக்கு நெருக்கடி கொடுக்க தொடங்கியுள்ளன
  • எஃப்.ஏ.டி.எஃப். ப்ளாக் லிஸ்டில் பாகிஸ்தானை சேர்க்க இந்தியா வலியுறுத்தல்
New Delhi:

காஷ்மீர் தீவிரவாத தாக்குதல் சம்பவத்தில் பாகிஸ்தானுக்கு மத்திய அரசு பதிலடி கொடுக்கத் தொடங்கியுள்ளது. முதல்கட்டமாக அந்நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் 200 சதவீதம் சுங்க வரியை மத்திய அரசு விதித்துள்ளது.

பருத்தி, சாயங்கள், கெமிக்கல், காய்கறிகள், இரும்பு மற்றும் உருக்கு உள்ளிட்ட பொருட்களை இந்தியா பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்கிறது. பாகிஸ்தானில் இருந்து பழங்கள், சிமென்ட், தோல், கெமிக்கல் மற்றும் மசாலா சாமான்கள் அதிகளவு இறக்குமதி செய்யப்படுகின்றன.

இரு நாடுகளுக்கும் இடையே ஆண்டுக்கு சுமார் 15 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் நடைபெறுகிறது. தற்போது மத்திய அரசு பாகிஸ்தானுக்கு விதித்திருக்கும் 200 சதவீத சுங்க வரி உயர்வால் அந்நாட்டிற்கு சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக இழப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச நெருக்கடி

பாகிஸ்தானின் வர்த்தக லாபத்தில் கை வைத்த அதே நேரத்தில் சர்வதேச நாடுகளையும், பாகிஸ்தானுக்கு நெருக்கடி கொடுக்க மத்திய அரசு முயற்சி எடுத்துள்ளது.

40 ரிசர்வ் போலீசாரின் உயிர்களை பறித்தது ஜெய்ஷ் இ முகமது என்ற தீவிரவாத அமைப்பு. இது பாகிஸ்தானை மையமாக கொண்டு செயல்படுகிறது. இதன் தலைவராக இருக்கும் மசூத் அசாருக்கு பாகிஸ்தான் பாதுகாப்பு அளித்து வருகிறது. நட்பு நாடு என்பதால் சீனாவும் பாகிஸ்தானுக்கு இந்த விவகாரத்தில் உதவி செய்து வருகிறது.

இந்த நிலையயில் மசூத் அசாரை தீவிரவாதி என்று ஐ.நா. சபை அறிவிக்க இந்தியா தொடர்ந்து வலியுறுத்துகிறது. இதற்கு பல சர்வதேச நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

ப்ளாக் லிஸ்ட்டில் சேருமா பாகிஸ்தான்?

சர்வதேச அளவில் Financial Action Task Force (FATF), என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. இது தீவிரவாதத்தை எந்த நாடு வளர்க்கிறதோ அந்த நாடுகளுக்கு உலக நிறுவனங்கள் கடன் வழங்குவதை ரத்து செய்து விடும். தீவிரவாதத்தை கண்காணிக்கும் அமைப்புகளில் ஒன்றாக இந்த எஃப்.ஏ.டி.எஃப். விளங்குகிறது.

இதன் கிரே லிஸ்டில் பாகிஸ்தான் இடம்பெற்றுள்ளது. அப்படியென்றால் உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், ஆசிய டெலவப்மென்ட் வங்கி, ஐரோப்பா வங்கி உள்ளிட்ட நிறுவனங்களிடம் இருந்து கடன் பெறும்போது, பாகிஸ்தானுக்கு கடும் கட்டுப்பாடுகள் இருக்கும்.

இந்த நிலையில் பாகிஸ்தானை பிளாக் லிஸ்டில் சேர்க்க மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. ப்ளாக் லிஸ்டில் சேர்ந்தால் பாகிஸ்தானுக்கு பொருளாதார பாதிப்பு இன்னும் கடுமையாகும்.

 

மேலும் படிக்க : வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை! - தமிழக அரசு அறிவிப்பு
 

.