This Article is From Aug 15, 2019

‘’3 மாவட்டங்களாக பிரிக்கப்படுகிறது வேலூர்’’ – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு!!

நெல்லை மாவட்டம் சமீபத்தில் நெல்லை, தென்காசி என இரண்டாக பிரிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.

‘’3 மாவட்டங்களாக பிரிக்கப்படுகிறது வேலூர்’’ – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு!!

சுதந்திர தினத்தையொட்டி சென்னை தலைமை போலீசார் அணிவகுப்பு நடைபெற்றது.

Chennai:

ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூரை தலைமையிடங்களாக கொண்டு வேலூர் மாவட்டம் மூன்றாக பிரிக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சுதந்திர தின உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

நாடு முழுவதும் 73-வது சுதந்திர தினவிழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி கொடியேற்றி வைத்து உரையாற்றினார். தனது உரையில் நீரின் முக்கியத்துவத்தை உணர்த்தும் ‘நீரின்றி அமையாது உலகு' என்ற திருக்குறள் வரிகளை குறிப்பிட்டு பேசினார்.

தற்போது முப்படைகளுக்கும் தனித்தனி தளபதிகள் இருந்து வருகின்றனர். மூவருக்கும் தலைவராக குடியரசு தலைவர் இருக்கிறார். இனி முப்படை தளபதிகளுக்கு தலைமை தளபதி நியமிக்கப்படுவார் என்று மோடி தனது சுதந்திர தின உரையில் குறிப்பிட்டார்.

இந்த நிலையில் சென்னை ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி போலீசாரின் அணிவகுப்பை ஏற்றார். பின்னர் 9 மணிக்கு கோட்டை கொத்தளத்தில் பிரமாண்ட தேசிய கொடியை ஏற்றி வைத்து சுதந்திர தின உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது-

மிகப்பெரிய மாவட்டமாக வேலூர் உள்ளது. இதனை நிர்வாக வசதிக்காக பிரிக்க வேண்டும் என்று அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதனை ஏற்று வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூரை தலைமையிடமாக கொண்டு 3 மாவட்டங்களாக பிரிக்கப்படும். வேலூர் தனி மாவட்டமாக செயல்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முதல்வராக எடப்பாடி பழனிசாமி சுதந்திர தினத்தில் கொடியேற்றி வைத்து உரையாற்றுவது என்பது இது இரண்டாவது முறையாகும். சமீபத்தில் நெல்லை மாவட்டத்தை நெல்லை மற்றும் தென்காசி என 2 மாவட்டங்களாக பிரிக்க தமிழக அரசு முடிவு செய்திருந்தது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள திருப்பத்தூர், ராணிப்பேட்டையை சேர்த்தால் தமிழகத்தில் உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை 37 ஆக உயரும்.

.