This Article is From Oct 09, 2018

‘2018-ல் இந்தியாவின் வளர்ச்சி 7.3%’- சர்வதேச நாணய நிதியம் தகவல்

நடப்பு ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி 7.3 சதவிகிதத்தைத் தொடும் என்று ஐ.எம்.எஃப் அல்லது சர்வதேச நாணய நிதியம், அறிக்கை மூலம் தகவல் தெரிவித்துள்ளது

‘2018-ல் இந்தியாவின் வளர்ச்சி 7.3%’- சர்வதேச நாணய நிதியம் தகவல்

இந்த கணிப்பு உண்மையாகும் பட்சத்தில், உலகின் அதிவேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா மீண்டும் நிலைபெறும்

ஹைலைட்ஸ்

  • இந்தியாவின் வளர்ச்சி 2018 ஆம் ஆண்டில், 7.3 சதவிகிதமாக இருக்கும், ஐஎம்எஃப்
  • 2019-ல் இந்தியாவின் வளர்ச்சி 7.4 சதவிகிதமாக இருக்கும், ஐஎம்எஃப்
  • சீனாவின் வளர்ச்சி மந்தமாகும், ஐஎம்எஃப்
Washington:

நடப்பு ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி 7.3 சதவிகிதத்தைத் தொடும் என்று ஐ.எம்.எஃப் அல்லது சர்வதேச நாணய நிதியம், அறிக்கை மூலம் தகவல் தெரிவித்துள்ளது. 

இது குறித்து ஐ.எம்.எஃப் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்திய நாட்டின் வளர்ச்சி 2018 ஆம் ஆண்டில், 7.3 சதவிகிதமாகவும், 2019-ல் 7.4 சதவிகிதமாகவும் இருக்கும். 2017-ல் 6.7 சதவிகிதம் தான் வளர்ச்சி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது’ என்று குறிப்பிட்டுள்ளது. 

மேலும், ‘இந்த வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைந்தது, முதலீடுகள் அதிகரித்ததும் நுகர்வு அதிகரித்ததும் தான்’ என்று அறிக்கை கூறியுள்ளது. இந்த கணிப்பு உண்மையாகும் பட்சத்தில், உலகின் அதிவேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா மீண்டும் நிலைபெறும். தற்போது அந்த இடத்தை சீனா தக்கவைத்துள்ளது.

2017 ஆம் ஆண்டு, சீனாவின் வளர்ச்சி இந்தியாவினுடையதை விட, 0.2 சதவிகிதம் அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில், சென்ற ஆண்டை விட, இந்த ஆண்டு இரு நாட்டுக்குமான வளர்ச்சிக் கணிப்பை சர்வதேச நாணய நிதியம் குறைத்துள்ளது. இதற்குக் காரணம், சர்வதேச வர்த்தகத்தில் நிலவி வரும் ஸ்திரத்தன்மையற்ற நிலைமை தான் என்று கூறப்பட்டுள்ளது. 

சீனாவைப் பொறுத்தவரை, 2017 ஆம் ஆண்டு, 6.9 சதவிகிதமாக வளர்ச்சி இருந்தது. இது நடப்பு ஆண்டுக்கு, 6.6 சதவிகிதமாக இருக்கும் என்றும், அடுத்த ஆண்டுக்கு 6.2 சதவிகிதமாக குறையும் என்றும் கணித்துள்ளது ஐ.எம்.எஃப்.

மேலும் அமெரிக்காவைப் பொறுத்தவரை, 2018-ல் 2.9 சதிவிகிதமாகவும், 2019 ஆம் ஆண்டு, 2.5 சதவிகிதமாகவும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.எம்.எஃப் அறிக்கையில் முடிவாக, ‘ஆசிய நாடுகள் தொடர்ந்து நல்ல வளர்ச்சி குறீயீட்டை காட்டி வருகின்றன. அதில் இந்தியா மற்றும் சீனாவின் பங்கு மிக அதிகமாக இருக்கிறது. தொடர்ந்து 4 ஆண்டுகள் இந்தியாவின் வளர்ச்சி மந்தமாக இருந்த நிலையில், தற்போது அது மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பியுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளது. 

.