This Article is From Mar 15, 2019

வழக்குகளை வாபஸ் பெற்றால் 3 தொகுதிகளிலும் இடைத்தேர்தல்!

தமிழகம், புதுவையில் உள்ள 40 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 18ம் தேதி வாக்குப்பதிவு நடக்க உள்ளது

வழக்குகளை வாபஸ் பெற்றால் 3 தொகுதிகளிலும் இடைத்தேர்தல்!

விடுபட்டுள்ள 3 தொகுதிகளின் தேர்தல் குறித்த வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால்தான் இடைத்தேர்தலை நடத்த இயலவில்லை. அந்த வழக்குகள் வாபஸ் பெறப்பட்டு விட்டால் அந்த 3 தொகுதிகளிலும் இடைத் தேர்தலை நடத்தி விடலாம் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

தமிழகம், புதுவையில் உள்ள 40 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 18ம் தேதி வாக்குப்பதிவு நடக்க உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 19ம் தேதி தொடங்குகிறது. நாடு முழுவதும் உள்ள 543 தொகுதிகளுக்கும் 7 கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டு, மே 23ம் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவு அறிவிக்கப்பட உள்ளது.

தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டசபைத் தொகுதிகளில் ஓட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தொடர்ந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, அந்த 3 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறாது. இதனால் 18 சட்டசபை தொகுதிகளுக்கு மட்டுமே இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த விளக்கத்தை ஏற்க மறுத்த திமுக, 3 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தள்ளி வைக்கப்பட்டிருப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதில் உள்நோக்கம் இருப்பதாக சென்னையில் நேற்று நடந்த திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

குறிப்பாக அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் பேரவைத் தலைவரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டு, அந்த தகுதி நீக்கம் ஏற்கனவே உயர்நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் இறுதிக்கு வந்துவிட்டது. அரவக்குறிச்சி மற்றும் ஒட்டப்பிடாரம் தொடர்பாக தொடரப்பட்டுள்ள வேறு தேர்தல் வழக்குகளில் “தேர்தலை நடத்தக் கூடாது என்று எவ்வித தடையுத்தரவும் தேர்தல் ஆணையத்திற்கு பிறப்பிக்கப்படவில்லை என திமுக தீர்மானத்தில் தெரிவித்துள்ளது.

இதனிடையே, சென்னையில் நேற்று மாலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தலைமையில் அனைத்துக் கட்சி ஆலோசனை கூட்டம் நடந்தது. அப்போது பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தல்களை சுமூகமாக நடத்துவது பற்றி ஆய்வு செய்யப்பட்டது.

அப்போது, 3 தொகுதிகளில் இடைத்தேர்தல் தள்ளி வைக்கப்பட்டதற்கு திமுக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது பேசிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, 3 தொகுதிகளின் தேர்தல் பற்றி நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் இருப்பதால்தான் இடைத்தேர்தலை நடத்த இயலவில்லை. அந்த வழக்குகள் வாபஸ் பெறப்பட்டு விட்டால் அந்த 3 தொகுதிகளிலும் இடைத் தேர்தலை நடத்தி விடலாம் என்றார்.

இதைத் தொடர்ந்து அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய மூன்று தொகுதிகளிலும் நிலுவையில் உள்ள வழக்குகளை திரும்பப் பெறும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதேபோல், தமிழகத்தில் விடுப்பட்ட 3 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த உத்தரவிட கோரி திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

.