This Article is From Aug 24, 2019

கேரள வெள்ள மீட்பு பணியில் பாராட்டைப் பெற்ற இளம் ஐ.ஏ.எஸ். அதிகாரி திடீர் ராஜினாமா!!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்தில் 8 நாட்களாக மிக சாதாரண மனிதர் தோற்றத்துடன் ஐ.ஏ.எஸ். அதிகாரி கண்ணன் கோபிநாதன் பணியாற்றினார். அவரை மற்ற அதிகாரிகள் அடையாளம் கண்டபின்னர்தான் அவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி என்ற தகவல் வெளி உலகுக்கு தெரிந்தது.

கேரள வெள்ள மீட்பு பணியில் பாராட்டைப் பெற்ற இளம் ஐ.ஏ.எஸ். அதிகாரி திடீர் ராஜினாமா!!

கேரள வெள்ள மீட்பு பணியை சிறப்பாக மேற்கொண்டு பலரது பாராட்டைப் பெற்ற இளம் ஐ.ஏ.எஸ். அதிகாரி கண்ணன் கோபிநாதன், தான் ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக உள்துறை அமைச்சகத்திற்கு கடந்த 21-ம்தேதி ராஜினாமா கடிதத்தை அனுப்பியிருக்கிறார். 

செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்திருக்கும் அவர், 'மக்களுக்காக குரல் கொடுப்பதற்கு எனது அதிகாரம் பயன்படுத்தப்படும் என்று நம்பித்தான் ஐ.ஏ.எஸ். பணிக்கு வந்தேன். ஆனால் சுதந்திரமாக எனது கருத்தை வெளிப்படுத்த முடியவில்லை' என்று கூறியுள்ளார். 

தான் ராஜினாமா செய்வதற்கு ஒருநாள் முன்பாக ட்வீட் செய்திருக்கும் கண்ணன் கோபிநாதன், 'சிவில் சர்வீஸ் பணி என்பது குடிமக்களின் உரிமையை நிலைநிறுத்தும் வாய்ப்பாக எண்ணிக் கொண்டிருந்தேன்' என்று குறிப்பிட்டிருந்தார். அவரது ராஜினாமா சமூக வலைதளங்களில் வைரலாகி விவாதப் பொருளாக மாறியுள்ளது. 

32 வயது மட்டுமே ஆகும் கண்ணன் கோபிநாதன், யூனியன் பிரதேசமான தாத்ரா நகர் ஹவேலியில் எரிசக்தி, நகர்ப்புற மேம்பாடு மற்றும் விவசாய துறைகளின் செயலராக உள்ளார். 2018-ல் கேரளாவில் பெரும் வெள்ளம் ஏற்பட்டது.

இதற்காக தாத்ரா நாகர் ஹவேலியில் திரட்டப்பட்ட நிவாரண நிதியை வழங்குவதற்காக கேரளா வந்த கோபிநாதன், அங்கேயே நிவாரண பணிகளில் இறங்கினார்.

சுமார் 8 நாட்களாக மக்களோடு மக்களாக நின்று மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டபோது அவர் யார் என்கிற விவரம் தெரியாமல் இருந்தது. அந்த அளவுக்கு அதிகாரியைப் போல் இல்லாமல் தன்னார்வலரைப் போன்று களத்தில் இறங்கி செயல்பட்டார் கண்ணன் கோபிநாதன்.

இதன்பின்னர் 9-வது நாளில் மற்ற அதிகாரிகள் கோபிநாதனை அடையாளம் கண்டு கொண்டனர். அதன்பின்னர், அவர் மீட்பு பணி செய்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி, அவருக்கு பாராட்டுக்களை குவித்தது.

.