This Article is From Feb 05, 2019

‘எதிர்கட்சிகளுக்கு மோடிஜி-யின் பரிசு இது..!’- கேலி செய்யும் கனிமொழி

தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மம்தா பானர்ஜியை, திமுக எம்.பி., கனிமொழி நேரில் சென்று சந்தித்து, அவரது போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

மம்தாவை, போராட்டக் களத்தில் சந்தித்தப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி, ‘தேர்தல் வரவுள்ள நிலையில், மோடிஜி மம்தா பானர்ஜி கொடுத்த பரிசுதான் இது’ என்று கருத்து தெரிவித்தார்.

ஹைலைட்ஸ்

  • தர்ணாவின் 2வது நாளில் கனிமொழி, மம்தாவை நேரில் சென்று சந்தித்தார்
  • மம்தாவின் நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றம் சென்றுள்ளது மத்திய அரசு
  • மம்தாவுக்கு, பல எதிர்கட்சித் தலைவர்கள் ஆதரவுக்கரம் நீட்டியுள்ளனர்
Kolkata:

மத்திய அரசுக்கு எதிராக கொல்கத்தாவில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை, திமுக எம்.பி., கனிமொழி நேரில் சென்று சந்தித்து, அவரது போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். மம்தாவை, போராட்டக் களத்தில் சந்தித்தப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி, ‘தேர்தல் வரவுள்ள நிலையில், மோடிஜி மம்தா பானர்ஜி கொடுத்த பரிசுதான் இது' என்று கருத்து தெரிவித்தார். 

மேற்கு வங்கத்தில் சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பாக விசாரணைக்குச் சென்ற சிபிஐ அதிகாரிகளை மாநில போலீஸார் கைது  செய்தனர். சிபிஐ விசாரணையை கண்டித்து முதல்வர் மம்தா பானர்ஜி ஞாயிறு முதல் தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார். 

மேற்கு வங்கத்தை மையமாக கொண்டு செயல்பட்டு வந்த சாரதா நிதி நிறுவனம் சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக கொல்கத்தா போலீஸாரும், சிபிஐ அதிகாரிகளும் விசாரணை நடத்தி வந்தனர். இதில் முக்கிய ஆவணங்கள் போலீஸ் தரப்பில் அழிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்படுகிறது.

இது குறித்து விசாரிக்க கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியது. அதில் அவர் ஆஜராகததால் சிபிஐ அதிகாரிகள் கொல்கத்தாவுக்கு விசாரணைக்காக வந்தனர். அப்போதுதான் கைது, தர்ணா போராட்டங்கள் அரங்கேறின. இந்த தர்ணாவிற்கு மம்தா, ‘சட்ட சாசனத்தைக் காக்க சத்தியாகிரகம்' என்று முழக்கமிட்டுள்ளார். அவருக்கு பல்வேறு எதிர்கட்சித் தலைவர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதன் நீட்சியாக ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் மற்றும் திமுக எம்.பி., கனிமொழி ஆகியோர், நேரில் சென்றே தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர். 

சந்திப்புக்குப் பின்னர் பேசிய கனிமொழி, ‘மம்தாவுக்கு, மோடிஜி தேர்தலுக்கு முன்னர் ஒரு பரிசை கொடுத்திருக்கிறார். தற்போது மொத்த இந்தியாவும் மம்தாவைத்தான் உற்று நோக்குகிறது. ஜனவரி 19 ஆம் தேதி மம்தா தலைமையில், கொல்கத்தாவில் நடந்த எதிர்கட்சிகளின் பேரணியைப் பார்த்த பாஜக, கண்டிப்பாக அஞ்சி நடுங்கியிருக்கும். மீண்டும் தாங்கள் ஆட்சிக்கு வரவே முடியாது என்று பாஜக கருதுகிறது. 

தற்போது, அரசுக்குக் கீழ் இயங்கும் அமைப்புகளின் சக்தியை பயன்படுத்தி, எதிர்கட்சிகளை சிதறடித்துவிடலாம் என்று ஆளுங்கட்சி தப்புக் கணக்குப் போட்டுள்ளது' என்று கொதித்தார். 

.