எனது வீட்டை மருத்துவமனையாக்கி மக்களுக்கு உதவ நினைக்கிறேன்: கமல்ஹாசன்

மக்களுக்கு உதவ நினைக்கிறேன். அரசின் அனுமதி கிடைத்தால், அதை செய்ய தயாராக காத்திருக்கிறேன்.

எனது வீட்டை மருத்துவமனையாக்கி மக்களுக்கு உதவ நினைக்கிறேன்: கமல்ஹாசன்

எனது வீட்டை மருத்துவமனையாக்கி மக்களுக்கு உதவ நினைக்கிறேன்: கமல்ஹாசன்

ஹைலைட்ஸ்

  • எனது வீட்டை மருத்துவமனையாக்கி உதவ நினைக்கிறேன்
  • 500க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • இதுவரை 9 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

எனது வீட்டை மருத்துவ மையமாக மாற்றிக் கொள்ளலாம் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுபடுத்தும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் மூன்று வாரத்திற்கு ஊரடங்கு உத்தரவு அறிவித்ததை தொடர்ந்து, அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகள் குறித்த கவலைகளுடன் உலகின் மிகப்பெரிய முடக்கம் தொடங்கியது. நேற்று மாலை நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி, நாடு தழுவிய ஊரடங்கு அறிவிக்கப்படுவதாகவும், அடுத்த 3 வாரங்களுக்கு மக்கள் வீட்டை விட்டு வெளியில் வருவது பற்றி சிந்திக்காமல் வீட்டிலே இருக்கும் படி கேட்டுக்கொண்டார். இந்தியாவில் இதுவரை 530 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 9 பேர் வரை உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. 

நேற்றிரவு நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி, கடந்த 2 நாட்களாக நாட்டின் பெரும்பான்மையான இடங்கள் முடக்கப்பட்டுள்ளன. நாட்டைக் காக்க நள்ளிரவு 12 மணி முதல் ஒட்டுமொத்த இந்தியாவே முடக்கப்படவுள்ளது. இந்த தேசிய ஊரடங்கு பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. 

ஆனால் நாட்டின் ஒவ்வொரு குடிமக்களின் உயிர்கள் எனக்கு முக்கியமானது. எனவே நீங்கள் நாட்டின் எந்தப் பக்கத்திலிருந்தாலும் நடமாட்டத்தைத் தவிர்த்துக் கொள்ளவும். அடுத்து வரும் 21 நாட்களுக்கு ஊரடங்கு இருக்கும். இந்த 21 நாட்களை நாம் சமாளிக்காவிட்டால் பல குடும்பங்கள் அழிந்து விடும். 21 ஆண்டுகள் பின்னோக்கி செல்ல வேண்டியிருக்கும் என்று அவர் கூறியிருந்தார்.

இதனிடையே, சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தமிழகத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா இருப்பதாக தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட 5 பேரில் 4 பேர் இந்தோனேசியாவைச் சேர்ந்தவர்கள் ஆவர். மீதமுள்ள ஒருவர் சென்னையைச் சேர்ந்த சுற்றுலா வழிகாட்டி ஆவார். 5 பேரும் சேலம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது,' எனத் தெரிவித்துள்ளார். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் தமது வீட்டை மருத்துவ மையமாக மாற்றிக் கொள்ளலாம் என அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, 'இந்த நெருக்கடி நேரத்தில் எளியோருக்கு பணி செய்ய மக்கள் நீதி மய்யத்தில் இருக்கும் மருத்துவர்களை கொண்டு, என் வீடாக இருந்த கட்டிடத்தை, தற்காலிகமாக எளிய மக்களுக்கான மருத்துவ மய்யமாக்கி, மக்களுக்கு உதவ நினைக்கிறேன். அரசின் அனுமதி கிடைத்தால், அதை செய்ய தயாராக காத்திருக்கிறேன்' என தெரிவித்துள்ளார்.