This Article is From Dec 11, 2018

‘சாதிப் பற்று இருப்பது தவறல்ல..!’- அமைச்சர் பாண்டியராஜன் சர்ச்சை பேச்சா?

எல்லாரும் அவர் சாதி மேல் பற்று இருப்பது தவறு இல்லை என்று தான் சொன்னேன். இதில் என்ன தவறு. "பற்று" வேறு "வெறி" வேறு. தேவையில்லாமல் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம்

‘சாதிப் பற்று இருப்பது தவறல்ல..!’- அமைச்சர் பாண்டியராஜன் சர்ச்சை பேச்சா?

தமிழக அமைச்சர் மாஃபா கே.பாண்டியராஜன், சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது, ‘சாதிப் பற்றுடன் இருப்பது தவறில்லை' என்று பேசியதாக செய்திகள் உலா வருகின்றன. இது அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையாகியுள்ளது.

சென்னை, கோயம்பேட்டில் இந்திய நாடார் பேரவை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நாடார் சங்கமம் நிகழ்ச்சியில், அமைச்சர் பாண்டியராஜன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

அப்போது அவர், ‘மனிதர்களாக இருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு மரபணு உள்ளது. அதேபோல, ஒவ்வொரு சமுதாயத்துக்கும் ஒரு குறிப்பிட்ட மரபணு உள்ளது. அந்த குறிப்பிட்ட சமுதாயத்தின் அடையாளமாக அந்த மரபணு உள்ளது. இது பரம்பரை பரம்பரையாக ரத்தத்தில் ஊறிக் கிடக்கிறது என்றே சொல்லலாம். ஆகவே, சாதிப் பற்று இருப்பது தவறு கிடையாது. சாதி வெறி தான் இருக்கக் கூடாது. இன்னொரு சாதியை ஒழிக்க வேண்டும் என்கின்ற எண்ணம் இருக்கக் கூடாது. நமது சமுதாயம் வளர வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்காது' என்று பேசியதாக சொல்லப்படுகிறது.

இது குறித்து பாண்டியராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘எல்லாரும் அவர் சாதி மேல் பற்றி இருப்பது தவறு இல்லை என்று தான் சொன்னேன். இதில் என்ன தவறு. "பற்று" வேறு "வெறி" வேறு. தேவையில்லாமல் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம்' என்று பதிவிட்டுள்ளார்.

.