This Article is From May 02, 2019

தேர்தல் நடத்தை விதிமீறல்: ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

இரட்டை குடியுரிமை கொண்டுள்ளதாக சுப்ரமணியன் சுவாமி அளித்த புகாரை தொடர்ந்து, உள்துறை அமைச்சகம் ராகுல் காந்திக்கு அவரது குடியுரிமை குறித்து விளக்க நோட்டீஸ் அளித்துள்ளது.

ஒட்டுமொத்த நாட்டிற்கே தெரியும் ராகுல்காந்தி யார் என்று என பிரியங்கா தெரிவித்துள்ளார்.

New Delhi:

பழங்குடியின மக்களை சுட்டுக் கொல்ல பிரதமர் மோடி புதிய சட்டம் கொண்டுள்ளதாக மத்திய பிரதேசத்தில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியது தொடர்பாக அவருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், மத்திய பிரதேசத்தில் உள்ள ஷாடோல் பகுதியில் கடந்த ஏப்ரல்.23 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, பழங்குடியின மக்களுக்கு எதிரான சட்டம் குறித்து பேசி மோடியை விமர்சித்தார்.

பழங்குடியின மக்களை சுட்டுக் கொல்ல பிரதமர் மோடி புதிய சட்டம் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், அந்த சட்டத்தின் படி, பழங்குடியினமக்களை தாக்கலாம், உங்கள் நிலங்களை அவர்கள் பறிக்கலாம், வனங்களை விட்டு வெளியேற்றலாம் , உங்களின் குடிநீரை அபகரிக்கலாம், பழங்குடியினர்களை சுடவும் செய்யலாம் என்று அந்த சட்டம் சொல்கிறது என்று பேசியுள்ளார்.

இதைத்தொடர்ந்து, பாஜக சார்பில் ராகுல் பேச்சு குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டது. அதில், தேர்தல் விதிகளை மீறி எதிர்கட்சிகள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை எழுப்பி வருவதாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது.

இதனை விசாரிக்க தேர்தல் ஆணையம் 48 மணி நேரத்தில் ராகுல் காந்தி உரிய விளக்கம் அளிக்காவிட்டால், மேற்கொண்டு அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து ராகுலுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. எனினும், இந்த விவகாரம் தொடர்பாக ராகுல் காந்தி தற்போது வரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

ஏற்கனவே, பாஜக மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்ரமணியன் சுவாமி உள்துறை அமைச்சகத்திடம் அளித்த புகாரில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இங்கிலாந்து நாட்டு குடியுரிமையும் வைத்திருப்பதாகக் கூறியிருக்கிறார்.

இந்தப் புகார் தொடர்பாக நடவடிக்கை எடுத்துள்ள உள்துறை அமைச்சகம் ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், இரட்டைக் குடியுரிமை புகார் குறித்து தனது நிலைப்பாட்டை ராகுல் விளக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும்,15 நாட்களுக்குள் இந்த நோட்டீசுக்கு பதிலளிக்க வேண்டும் என்று கெடு விதிக்கப்பட்டுள்ளது.

.