This Article is From Nov 23, 2018

கடனை தள்ளுபடி செய்யக்கோரி மும்பையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பேரணி

கோரிக்கை நிறைவேற்றப்படும்வரை ஆசாத் மைதானத்தை விட்டு வெளியேறப் போவதில்லை என்று போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்

போராட்டம் காரணமாக மும்பையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Mumbai:

கடனை தள்ளுபடி செய்யக்கோரி மும்பையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் இன்று பேரணி நடத்தினர். அவர்களின் கோரிக்கை ஏற்கப்படும் என்று மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவீஸ் எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்துள்ளார்.

பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை அதிகரிக்க வேண்டும், கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 7 ஆயிரத்திற்கும் அதிகமான விவசாயிகள் மும்பையில் இன்று பேரணி நடத்தினர்.

இதனால் அங்கு போக்குவரத்து பெரும் அளவில் பாதிக்கப்பட்டது. ஆசாத் மைதானத்தில் கூடிய அவர்கள், கோரிக்கை நிறைவேற்றப்படும் வரையில் மைதானத்தை விட்டு வெளியே செல்ல மாட்டோம் என்று அறிவித்தனர்.

இந்த நிலையில் விவசாய சங்க பிரதிநிதிகள் முதல்வர் தேவேந்திர பட்னாவீசை முதல்வர் இல்லத்தில் வைத்து சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்பதாக முதல்வர் தரப்பில் இருந்து எழுத்துப்பூர்வமாக உறுதி அளிக்கப்பட்டது.

முன்னதாகமாநில அமைச்சர்கள் கிரிஷ் மகாஜன், விஷ்ணு சாவ்ரா, குல்பரோ பாட்டீல் உள்ளிட்டோர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மகாராஷ்டிர மாநிலத்தில் விவசாயிகள் பேரணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டில் மட்டுமே 3-வது விவசாய பேரணி பிரமாண்டமாக நடந்து முடிந்துள்ளது. அவர்களுக்கு ஆம் ஆத்மி, சிவசேனா, மதசார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்திருக்கின்றன.

.