This Article is From Dec 02, 2018

லட்சம்பேர் எதிர்பார்ப்பு - நூற்றுக்கணக்கில் மட்டுமே திரண்ட ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள்

ராமர் கோயில் கட்டுவது தொடர்பான பொதுக்கூட்டத்தை ஆர்.எஸ்.எஸ். டெல்லியில் ஏற்பாடு செய்திருந்தது.

லட்சம்பேர் எதிர்பார்ப்பு - நூற்றுக்கணக்கில் மட்டுமே திரண்ட ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள்

பேரணியில் பயன்படுத்தப்பட்ட ஒரேயொரு மினி லாரி

New Delhi:

ராமர் கோயில் கட்டுவது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் டெல்லியில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் ஒன்றை ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. லட்சம்பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நூற்றுக்கணக்கில் மட்டுமே ஆட்கள் திரண்டதால் ஏற்பாட்டாளர்கள் அதிருப்தி அடைந்தனர்.

ராமர் கோயில் கட்ட வலியுறுத்தி சிவசேனா, வி.எச்.பி. உள்ளிட்ட அமைப்புகள் கடந்த சில வாரங்களாக போராட்டங்கள் நடத்தி வருகின்றன. ஆர்.எஸ்.எஸ். சார்பாக டெல்லியில் பேரணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

ராமர் கோயிலை கட்ட வலியுறுத்தி இந்த பேரணியை விழா ஏற்பாட்டாளர்கள் செய்திருந்தனர். டெல்லியின் ஜந்தேவாலா கோயில் முன்பாக பேரணி கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது. இதில் லட்சத்திற்கும் அதிகமானோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நூற்றுக் கணக்கில் மட்டுமே தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து பேரணி ஒருங்கிணைப்பாளர் கமல் திவாரி கூறுகையில், ''இந்த கூட்டத்தில் சிலர் மட்டும்தான் கலந்து கொண்டுள்ளனர். பேரணி செல்லும்போது மேலும் பலர் கலந்து கொள்வார்கள். ராம் லீலா மைதானத்தில் நடைபெறும் கடைசிநாள் நிகழ்ச்சியில் 6 முதல் 8 லட்சம்பேர் வரை கலந்து கொள்வார்கள்" என்று தெரிவித்தார்.

கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கூறுகையில், இந்த பேரணியின் மூலமாக உச்ச நீதிமன்றத்திற்கு ஒரு தகவலை சொல்லிக் கொள்ள விரும்புகிறோம். சின்னச் சின்ன வழக்குகளுக்கெல்லாம் உச்ச நீதிமன்றம் நள்ளிரவில் விசாரணை நடத்துகிறது. ராமர் கோயில் பிரச்னை எவ்வளவு முக்கியமானது என்பது தெரியவில்லை என்றனர்.

அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ராமர் கோயில் தொடர்பான வாக்குறுதி தேர்தலில் முக்கிய பங்கை வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக பாஜக முன்கூட்டியே முடிவு எடுக்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.
 

.