ஜம்மு காஷ்மீரில் ராணுவ வாகனம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்! பாதுகாப்பு படை பதிலடி!!

புல்வாமா மாவட்டத்தில் அரிஹால் என்ற கிராமத்தில் ராணுவ வாகனம் மீது தாக்குதல் நடந்துள்ளது.

தாக்குதலில் ராணுவ வாகனம் சேதம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Pulwama:

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ராணுவ வாகனம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தில் வாகனம் பலத்த சேதம் அடைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தீவிரவாத தாக்குதலில் வீரர்கள் யாரேனும் உயிரிழந்துள்ளனரா என்பது குறித்த விவரம் உடனடியாக தெரியவரவில்லை. துணை ராணுவ பிரிவான ராஷ்டிரிய ரைபிள்ஸின் ராணுவ வாகனம் மீது தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். 

புல்வாமா மாவட்டத்தின் அரிஹால் கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதற்கு சில மணிநேரம் முன்பாக தெற்கு காஷ்மீர் பகுதியில் அனந்த்நாக் மாவட்டத்தில் தீவிரவாதிகளுக்கும் ராணுவத்திற்கும் இடையே என்கவுன்ட்டர் நடந்தது. 

இதில் ராணுவ மேஜர் ஒருவர் உயிரிழந்தார். படுகாயங்களுடன் 3 வீரர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஒருவாரத்திற்கு முன்பு அனந்த்நாக்கில் மற்றொரு என்வுன்ட்டர் நடந்தது. இதில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் அர்ஷாத் அகமது கான் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். 

கடந்த பிப்ரவரியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வாகனத்தின் மீது தீவிரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதலை நடத்தினர். இதில் 40 வீரர்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

More News