This Article is From May 21, 2019

தமிழகம் முழுவதும் மே.23ல் டாஸ்மாக் கடைகளை மூட தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவு!

இதற்காக, தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை தினமான மே 23-ம் தேதி அன்று இரவு 12 மணி வரை டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும்

தமிழகம் முழுவதும் மே.23ல் டாஸ்மாக் கடைகளை மூட தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவு!

தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே.23-ம் தேதி டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ உத்தரவிட்டு உள்ளார்.

நாடு முழுவதும் உள்ள 543 தொகுதிகளுக்கும் 7 கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டு, மே 23ம் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவு அறிவிக்கப்பட உள்ளது. இதற்காக கடந்த மாதம் முதல் நடந்த வந்த மக்களவை தேர்தல், கடந்த 19ம் தேதியுடன் இறுதிபெற்றது. 

இதில், தமிழகத்தில் மொத்தமுள்ள 39 மக்களவைத் தொகுதிகளில், வேலூர் தொகுதியில் மட்டும் அதிக அளவில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட காரணத்தால், அங்கு தேர்தலை ரத்து செய்து இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதைத்தொடர்ந்து, காலியாக உள்ள 22 சட்டப்பேரவைத் தொகுதிகளில், 18 தொகுதிகளுக்கும், 38 மக்களவை தொகுதிகளுக்குமான தேர்தல் கடந்த ஏப்.18ஆம் தேதி நடைபெற்றது. 

தொடர்ந்து, மீதமுள்ள 4 சட்டமன்ற தொகுதிக்கும் 7வது மற்றும் இறுதிகட்ட தேர்தல் நடைபெற்ற 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. எனினும், வேலூர் மக்களவைத் தொகுதியில் எப்போது தேர்தல் நடைபெறும் என்பது குறித்து தேர்தல் ஆணையம் எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. 

இந்நிலையில், ஏழு கட்டமாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் 23ம் தேதி எண்ணப்பட உள்ளன. இதற்காக, தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை தினமான மே 23-ம் தேதி அன்று இரவு 12 மணி வரை டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ உத்தரவிட்டு உள்ளார்.

.