This Article is From Jan 07, 2019

''கருத்து கேட்பு என்ற பெயரில் நாடகம் நடத்தியுள்ளது''- தேர்தல் ஆணையம் மீது பாயும் தினகரன்

திருவாரூர் இடைத்தேர்லை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ள நிலையில், முதலில் வேட்பாளரை அங்கு அறிவித்த அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தேர்தல் ஆணையத்தை விமர்சித்துள்ளார்.

''கருத்து கேட்பு என்ற பெயரில் நாடகம் நடத்தியுள்ளது''- தேர்தல் ஆணையம் மீது பாயும் தினகரன்

கஜா புயல் நிவாரண பணிகள் முழுமை அடையவில்லை என்பதை சுட்டிக் காட்டி, இந்திய தேர்தல் ஆணையம் திருவாரூர் இடைத்தேர்தலை ரத்து செய்திருக்கிறது. இந்த விவகாரத்தில் நாடகத்தை நடத்தியுள்ளதாக தேர்தல் ஆணையம் மீது அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது-

தேர்தல் அறிவிக்கை வெளியிட்டு தேர்தல் நடைமுறைகள் தொடங்கிய பிறகு, கருத்து கேட்பு என்ற பெயரில் ஒரு நாடகத்தை நடத்தி திருவாரூர் தொகுதி இடைத் தேர்தலை ரத்து செய்திருக்கிறது தேர்தல் ஆணையம். இது ஜனநாயக நடைமுறைகளை கேலிக்கூத்தாக்குவதாகும்.

இந்த ஜனநாயக விரோத செயலை ஆளும் அ.தி.மு.க. வுக்கு சாதகமாக செய்ய முயன்றபோதே கண்டித்திருக்க வேண்டிய தி.மு.க.வும் இதற்கு துணைபோனது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தி.மு.க.வுக்கும் தோல்வி பயம் இருந்ததையே இது காட்டியது.

திருவாரூரில் அ.ம.மு.க. வெற்றி பெறும் என்ற கள யதார்த்தத்தை உணர்ந்தே இந்த விஷயத்தில் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் கைகோர்த்துள்ளன. இதற்கு சரியான தண்டனையை எப்போது தேர்தல் வந்தாலும் இந்த இரண்டு கட்சிகளுக்கும் வழங்க திருவாரூர் மக்கள் தயாராகவே இருக்கிறார்கள்.

இவ்வாறு தினகரன் கூறியுள்ளார்.
 

.