This Article is From Oct 09, 2019

பாஜக - நிதிஷ் குமார் கூட்டணியில் விரிசல்! தசரா விழாவை புறக்கணித்த பாஜக தலைவர்கள்!

இது தொடர்பாக மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தலைமையிலான பாஜகவின் ஒரு பிரிவினர், பாட்னாவில் கடந்த மாதம் வெள்ளத்தால் ஏற்பட்ட நீர்வீழ்ச்சி தொடர்பாக நிதீஷ் குமாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டது.

பாஜக - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணியில் விரிசல்!

Patna:

பாட்னாவின் காந்தி மைதானத்தில் நேற்று மாலை நடந்த தசரா விழாவில் பாஜக தலைவர்கள் யாரும், பங்கேற்காமல் விலகியது, பீகாரின் ஆளும் கூட்டணியான, முதல்வர் நிதீஷ்குமார் மற்றும் பாஜகவுக்கு இடையிலான விரிசலை தெளிவாக காட்டுகிறது. 

முக்கிய சமூக விழாக்களில் கட்சித் தலைவர்கள் அனைவரும் பங்கேற்பது பாரம்பரியமானது. அந்தவகையில், நவராத்திரி விழாக்களின் போது நடைபெறும் ராம் லீலாவின் உச்சகட்டமான ராவண வதத்துக்கு, ஒரு தனியார் குழு ஏற்பாடு செய்திருந்தது. இந்த விழாவிற்கு முதல்வர் நிதிஷ் குமார், பீகார் சட்டமன்ற சபாநாயகர் விஜய் சவுத்ரி மற்றும் பீகார் காங்கிரஸ் தலைவர் மதன் மோகன் ஜா ஆகியோர் மட்டுமே கலந்து கொண்டனர்.

இந்த விழாவிற்கு அனைத்து பாஜக தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும், அனைவரும் பங்கேற்காமல் இருப்பது ஒரு திட்டமிட்ட அரசியல் நடவடிக்கை போல் தோன்றியது. மேலும், ஆளுநர் பாகு சவுகான், துணை முதல்வர் சுஷில் மோடி, பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாட்னா மேயர் சீதா சாஹு ஆகிய அனைவரும் மாநிலத்திலே உள்ளனர் என்றும் வேறு எங்கும் செல்லவில்லை என்றும் தகவல்கள் தெரிவித்துள்ளன.

இந்த விழாவில் பாஜக தலைவர்கள் இல்லாதது அவர்களுக்கு ஆச்சரியமளிப்பதாக விழா அமைப்பாளர்கள் தெரிவித்தனர். அறக்கட்டளைக் குழுவின் உறுப்பினர் கமல் நோபானி, "எல்லோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அனைவரும் வழக்கமாக கலந்துகொள்வார்கள், ஆனால் இன்று பாஜகவிலிருந்து யாரும் வரவில்லை... மேலும், அவர்கள் விழாவில் பங்கேற்க மாட்டார்கள் என்று எங்களுக்கு எந்த முன் தகவலும் இல்லை" என்றார்.

பீகாரில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மாநிலத்தை பெரிதும் பாதிப்படைய செய்தது. இந்த விவகாரத்தில் முதல்வர் நிதிஷ்குமாரின் செயல்பாட்டை பாஜக சரமாரியாக விமர்சித்து வந்ததாக தெரிகிறது. ஏற்கனவே கூட்டணி கட்சிகளுக்குள் இருந்த விரிசலை இது மேலும் பெரிதுப்படுத்தியுள்ளது. 

முன்னதாக, மக்களவை தேர்தலில் பீகார் மாநிலத்தில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியுடன் இணைந்து பாஜக போட்டியிட்டது. மொத்தமுள்ள 40 தொகுதிகளில் பாஜக 17 இடங்களிலும், நிதிஷ் கட்சி 16 இடங்களிலும் வெற்றி பெற்றது. 

இதைத்தொடர்ந்து, பாஜக கூட்டணியில் உள்ள சிவசேனா உள்ளிட்ட பல்வேறு கூட்டணி கட்சிகளுக்கும் அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டிருந்தன. ஆனால், பீகாரில் கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம் கட்சி அமைச்சரவை பட்டியலில் இடம்பெறவில்லை. 
 

.