This Article is From Jun 20, 2019

குடிநீர் தட்டுப்பாடு: கல்குவாரிகளில் இருந்து தண்ணீர் வழங்க நடவடிக்கை: அமைச்சர் பாண்டியராஜன்

சென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க, புதிய கல்குவாரிகளை கண்டறிந்து கூடுதலாக குடிநீர் வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

குடிநீர் தட்டுப்பாடு: கல்குவாரிகளில் இருந்து தண்ணீர் வழங்க நடவடிக்கை: அமைச்சர் பாண்டியராஜன்

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மழை இல்லாமல், சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் அனைத்தும் வறண்டுவிட்டது. நீர் நிலைகள் சரியான முறையில் பராமரிக்கப்படவில்லை. ஏரி, ஆறு, வாய்க்கால் என அனைத்து பகுதிகளிலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு விட்டதால் நீர் ஆதாரம் குறுகிவிட்டது.

இதனால், சென்னை மெட்ரோ வாட்டர் குழாய்களில் வழங்கும் தண்ணீர் சுமார் 40 சதவீதம் அளவிற்கு நிறுத்தப்பட்டுள்ளது. சென்னைக்கு ஒரு நாளைக்கு 800 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால் 525 மில்லியன் லிட்டர் மட்டுமே தற்போது, தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது.

இப்படி, கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டால் சென்னையில் ஹோட்டல்கள், வணிக நிறுவனங்கள் திணறி வருகின்றன. மேலும் தங்கும் விடுதிகளும் முடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. சென்னையின் குடிநீர் பிரச்னையை தீர்க்க தமிழக அரசு பல்வேறு நடவடிகையில் ஈடுபட்டுள்ளது.

இந்த சூழலில் இது குறித்து பேசிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறும்போது, தற்போது, நாளொன்றுக்கு 525 மில்லியன் லிட்டர் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது, கூடுதலாக குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மழைநீர் சேகரிப்பு திட்டத்தை மேம்படுத்த நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், ஐயனாம்பாக்கம் ஏரியையும், கொரட்டூர் ஏரியையும் குடிநீர் ஏறியாக மாற்றுவதற்காக, 32 கோடி + 30 கோடி செலவில் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளது. அதனால் தான், இன்று கொஞ்சம் சமாளிக்க முடிகிறது. இன்னும் பல திட்டங்கள் தீட்ட வேண்டியுள்ளது.

அடையாளம் காணப்படாத பல இடங்களில் இருந்து, குறிப்பாக குவாரிகளில் இருந்து தண்ணீர் எடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது என்று அவர் கூறியுள்ளார்.

.