This Article is From Nov 08, 2019

மறப்போம், மன்னிப்போம்! அமைச்சருக்கு எதிரான போராட்டத்தை தவிருங்கள்: ஸ்டாலின் வேண்டுகோள்

அமைச்சர் பாண்டியராஜனுக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில், நாடு முழுவதும் நடத்தி வரும் எதிர்ப்புப் போராட்டங்களை, அன்புகூர்ந்து தவிர்க்குமாறு திமுக தொண்டர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

மறப்போம், மன்னிப்போம்! அமைச்சருக்கு எதிரான போராட்டத்தை தவிருங்கள்: ஸ்டாலின் வேண்டுகோள்

மறப்போம், மன்னிப்போம்! இது தான் அண்ணாவும் கருணாநிதியும் நமக்குக் கற்றுத் தந்த அரசியல் பாடங்கள்.

அமைச்சர் பாண்டியராஜனுக்கு எதிரான போராட்டத்தை தவிருங்கள் என திமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

மிசா காலத்தில் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் இழிவு படுத்தியதாக திமுக சார்பில் குற்றஞ்சாட்டப்பட்டது. இதையடுத்து திமுக சார்பில் அமைச்சர் பாண்டியராஜனுக்கு எதிராக அறிவிப்புகள் வெளியாகின. இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் பாண்டியராஜனுக்கு எதிராக போராட்டங்களும் நடந்து வருகின்றன.

இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தியாகம் செய்து அரசியலுக்கு வந்து, மக்கள் தரும் பதவிப் பொறுப்புகளை அடைந்தவர்களுக்குத்தான், தியாகத்தைப் புரிந்து கொள்ளும் அறிவும் பக்குவமும், கொச்சைப்படுத்தாத சிந்தனையும் வரும். திரும்பி வராதது காலம்; திருத்தி எழுதப்பட முடியாதது வரலாறு. எவ்வளவு படித்திருந்தாலும், சிலருக்கு இந்த அடிப்படை புரியாது. சுமார் 44 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் தியாக வரலாற்று நிகழ்வுகளை, அவருடைய அரசியல் லாப நோக்கில், வக்கிர எண்ணத்துடன், திருத்தி எழுத எத்தனிக்கிறார், அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்.

நான் மட்டுமல்ல, திமுகவைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், அன்றைய மத்திய அரசு அமல்படுத்திய அவசர நிலைப் பிரகடனத்தை எதிர்த்த காரணத்தால், உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சிறை வைக்கப்பட்டோம். அதற்கான ஆவணங்கள் சிறைத்துறையில், சட்டப்பேரவை ஆவணங்களில், நீதியரசர் எம்.எம். இஸ்மாயிலால் அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தில் நிரம்ப இருக்கின்றன. படிக்கத் தெரிந்தவர்கள், படிக்க மனமிருப்பவர்கள், பார்த்துத் தெரிந்து தெளிவுகொள்ளலாம். எல்லாம் எனக்குத் தெரியும் என்ற தன்முனைப்பால், தெளிவு பிறக்காது.

அரசியலமைப்புச் சட்டத்தின்பால் பதவிப் பிரமாணம் எடுத்துவிட்டு, நாலாந்தரப் பேச்சாளரின் நடையைத் தழுவி, பாண்டியராஜன் பேசி இருப்பது, உண்மையில் எனக்கு வருத்தம் தரவில்லை. ஏனென்றால், கல்லிலும் முள்ளிலும் நடந்து கடும் பயணம் மேற்கொண்டு, சொல்லடி பட்டு துயரங்களைத் தாங்கி, தியாகம் செய்து அரசியலுக்கு வந்து, மக்கள் தரும் பதவிப் பொறுப்புகளை அடைந்தவர்களுக்குத்தான், தியாகத்தைப் புரிந்து கொள்ளும் அறிவும் பக்குவமும், கொச்சைப்படுத்தாத சிந்தனையும் வரும்.

ஆனால் பாண்டியராஜன், அந்த வகைப்பட்டவர் அல்ல என்பதை நான் சொல்லி யாரும் தெரிந்துகொள்ள வேண்டியது இல்லை. அவரது கட்சிக்காரர்களே முழுவதையும் அறிவார்கள். இதுபோன்ற எத்தனையோ ஏசல்களையும் இழிமொழிகளையும் அவமானங்களையும் சுமந்துதான், திமுக என்ற தன்மான - அறிவியக்கம் எழுந்து, தலை நிமிர்ந்து நிற்கிறது. இந்த அவமானங்கள், வேரில் வெந்நீர் ஊற்றுவதற்காகச் செய்யப்படுகின்றன. ஆனால் அதனையும் நன்னீர் ஆக்கிக் கொண்டு, மேலும் வளர்ந்து படரும் சக்தி படைத்தது திமுக.

எனவே, அமைச்சர் பாண்டியராஜனுக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில், நாடு முழுவதும் நடத்தி வரும் எதிர்ப்புப் போராட்டங்களை, அன்புகூர்ந்து தவிர்க்குமாறு திமுக தொண்டர்களைக் கேட்டுக்கொள்கிறேன். அவர் பயன்படுத்தும் சொல், அவர் யார் என்பதையும், அவரது தரத்தையும் இந்த நாட்டு மக்களுக்குத் தோலுரித்துக் காட்டிவிட்டது; அவ்வளவு தான்.

"பயனில் சொல் பாராட்டுவாரை” பதர்தான் என்றார் திருவள்ளுவர். "இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்" - என்ற வள்ளுவரின் அறிவுரைக்கு ஏற்ப நாம் நடந்து கொள்வோம். மறப்போம், மன்னிப்போம்! இது தான் அண்ணாவும் கருணாநிதியும் நமக்குக் கற்றுத் தந்த அரசியல் பாடங்கள்.

பாண்டியராஜன் என்ன படித்தார், எதைக் கற்றார், என்ன புரிந்துகொண்டார் என்பதை, அவர் பயன்படுத்தும் சொற்களே காட்டிக் கொடுத்துவிட்டன. நாம் பயனுள்ள சொற்களையே பயன்படுத்துவோம்; இழி சொற்களை ஏற்க மாட்டோம்; அவை எங்கிருந்து புறப்பட்டதோ, அந்த இடத்திற்கே போய்ச் சேர்ந்துவிடும்.வாழ்க வசவாளர்கள்," என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

.