This Article is From Jan 28, 2020

”விஞ்ஞானப்பூர்வமாக ஊழல் செய்வதில் கில்லாடிகள் திமுகவினர்”: ஜெயக்குமார் விமர்சனம்!

‘திமுக ஆட்சியின் விஞ்ஞானபூர்வ ஊழல்’ என்று எழுதிய புத்தகத்தை மு.க.ஸ்டாலினுக்கு கொடுத்தால் மகிழ்ச்சியாக இருக்கும்.

”விஞ்ஞானப்பூர்வமாக ஊழல் செய்வதில் கில்லாடிகள் திமுகவினர்”: ஜெயக்குமார் விமர்சனம்!

இமயமலையை விழுங்கிய மகாதேவன் திமுக தான் - ஜெயக்குமார்

விஞ்ஞானப்பூர்வமாக ஊழல் செய்வதில் திமுகவினரை விட கில்லாடித்தனமாக யாரும் செய்ய முடியாது என அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார். 

இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை வாங்கி கொடுப்போம். புற்றீசல் போல தென்படும் தனியார் பயிற்சி மையங்கள் அடையாளம் காணப்பட்டு களை எடுக்கும் நடவடிக்கை நிச்சயம் நடக்கும்.

மு.க.ஸ்டாலின் முதலில் அவரது முதுகை திரும்பி பார்த்து எவ்வளவு ஊழல் கறை இருக்கிறது என்று பார்க்க வேண்டும். சர்க்காரியா கமிஷன், பூச்சிமருந்து ஊழல், வீராணம் திட்டத்தில் முறைகேடு, சென்னையில் பாலங்கள் கட்டியதில் முறைகேடு எல்லாம் திமுக ஆட்சியில் நடைபெற்றது.

விஞ்ஞானப்பூர்வமாக ஊழல் செய்வதில் அவர்களை விட கில்லாடித்தனமாக யாரும் செய்ய முடியாது. ஊழலுக்காக ஒரு அரசாங்கம் கலைக்கப்பட்டது என்றால் அது திமுக ஆட்சியில் தான். அந்த கூட்டணியில் இருக்கும் பீட்டர் அல்போன்ஸ் 1996-ல் பாலம் கட்டப்பட்டது குறித்து ‘திமுக ஆட்சியின் விஞ்ஞானபூர்வ ஊழல்' என்று எழுதிய புத்தகத்தை மு.க.ஸ்டாலினுக்கு கொடுத்தால் மகிழ்ச்சியாக இருக்கும்.

அகில இந்திய அளவில் 2-ஜி ஊழல் நடத்தினர். பரங்கிமலையை விழுங்கிய மகாதேவனை பார்த்து இருக்கிறோம். ஆனால், இமயமலையை விழுங்கிய மகாதேவன் திமுக தான் என்று கூறினார்.

தொடர்ந்து, பேசிய அவர், சசிகலா குறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியது அவரது சொந்த கருத்து. அது கட்சியின் கருத்து அல்ல. சசிகலாவும், அவரை சார்ந்தவர்களும் எந்த நிலையிலும் ஆட்சியிலும், கட்சியிலும் பங்கேற்க முடியாது என்று ஏற்கனவே கட்சியில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தற்போது கட்சியும், ஆட்சியும் நன்றாக சென்று கொண்டு இருக்கிறது.

இதே நிலை வருங்காலத்திலும் நீடிக்கும். சசிகலா சிறையில் இருந்தாலும், வெளியில் இருந்தாலும் கட்சிக்கும், ஆட்சிக்கும் எந்த பாதிப்பும் ஏற்படப்போவது இல்லை என்று அவர் கூறினார்.

.