This Article is From Aug 06, 2020

கமலாலயத்தில் திமுக எம்எல்ஏ கு.க செல்வம்! தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்தது திமுக!

திமுகவிலிருந்து தற்காலிகமாக நீக்கி வைப்பதாகவும், நிரந்தரமாக ஏன் நீக்கக்கூடாது என விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் திமுக அறிக்கை வெளியாகியுள்ளது.

கமலாலயத்தில் திமுக எம்எல்ஏ கு.க செல்வம்! தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்தது திமுக!

ஹைலைட்ஸ்

  • தமிழ் கடவுள் முருகனை இழிவுபடுத்தியவர்களை மு.க ஸ்டாலின் கண்டிக்க வேண்டும்
  • காங்கிரஸ் கட்சியுடனான தொடர்பை திமுக துண்டிக்க வேண்டும்
  • தன்னுடன் இருப்பவர்கள் பாரதிய ஜனதா கட்சியில் சேர வேண்டும்

திமுக ஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கு.க. செல்லம் பாஜகவின் தேசிய தலைவர் ஜேபி நட்டாவை சந்திக்க நேற்று டெல்லி சென்றிருந்தார். இந்நிலையில் அவர் பாஜகவில் இணைவதாக பல தகவல்கள் வெளியாகியிருந்தன.

நட்டாவை சந்தித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த செல்வம் தான் பாஜகவில் இணையவில்லை என்றும், அதேபோல தமிழ் கடவுள் முருகனை இழிவுபடுத்தியவர்களை திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கண்டிக்க வேண்டும் என்றும், பாரதத்தில் நல்லதொரு ஆட்சியை நடத்திக்கொண்டிருக்கும் பாஜகவை தொடர்ந்து விமர்சித்து வரும் ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியுடனான தொடர்பை திமுக துண்டிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

கட்சி தலைமைக்கு தகவல் அளிக்காமல் எதிர்க்கட்சித் தலைவர்களை சந்தித்தது குறித்து தங்களது கட்சி தலைமை தங்கள் மீது நடவடிக்கை எடுத்தால் என்ன செய்வீர்கள் என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “நடவடிக்கை எடுத்தால் அதை சந்திக்க தான் தயாராக இருப்பதாக” செல்வம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், திமுக தலைமை நிலைய அலுவலகச் செயலாளர் மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர் கு.க. செல்வம் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் இன்று முதல் விடுவிக்கப்படுகிறார் என திமுக அறிவித்தது. இதனைத் தொடர்ந்து கு.க. செல்வம் சென்னை பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்திற்கு சென்று, பாஜக தலைவர்களை சந்தித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அதில், “தன்னுடன் இருப்பவர்கள் பாரதிய ஜனதா கட்சியில் சேர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.” எனக் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து, திமுக செல்வம் மீது ஒழுங்கு நடவடிக்கையை எடுத்துள்ளது. அவரை திமுகவிலிருந்து தற்காலிகமாக நீக்கி வைப்பதாகவும், நிரந்தரமாக ஏன் நீக்கக்கூடாது என விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் திமுக அறிக்கை வெளியாகியுள்ளது.

.