This Article is From Feb 11, 2020

'தோல்வியை ஏற்கிறோம்; வாக்குறுதிகளை ஆம் ஆத்மி நிறைவேற்றும் என நம்புகிறோம்' : டெல்லி பாஜக

டெல்லி சட்டமன்ற தேர்தல் இன்று வெளியாகியுள்ளன. இதில் 63 இடஙகளில் வெற்றி பெற்று ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. தேர்தல் தோல்வியை ஏற்பதாக டெல்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி கூறியுள்ளார்.

'தோல்வியை ஏற்கிறோம்; வாக்குறுதிகளை ஆம் ஆத்மி நிறைவேற்றும் என நம்புகிறோம்'  : டெல்லி பாஜக

டெல்லி வாக்காளர்களுக்கு மனோஜ் திவாரி நன்றி தெரிவித்துள்ளார்.

New Delhi:

டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை ஏற்பதாக டெல்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி அறிவித்துள்ளார். வெற்றி பெற்றுள்ள ஆம் ஆத்மி கட்சிக்கு அவர் வாழ்த்துக் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், 'டெல்லி வாக்காளர்களுக்கு நன்றி. உங்களின் நலனுக்காக கட்சி தொடர்ந்து உழைக்கும். மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்கிறோம். அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வாழ்த்துக்கள். 

தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை ஆம் ஆத்மி கட்சி டெல்லி மக்களுக்கு நிறைவேற்றும் என நம்புகிறேன். பாஜக தோல்விக்கு நானே பொறுப்பு ஏற்றுக் கொள்கிறேன். தேர்தல் தோல்விக்கான காரணம் குறித்து ஆய்வு செய்வோம். எதிர்காலத்தில் இதுபோன்ற பின்னடைவு ஏற்படாது என்று நான் நம்புகிறேன்.' என்று கூறியுள்ளார். 

கடந்த 2015 டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி 67 இடங்களிலும், பாஜக 3 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தது. இந்த தேர்தலில் ஆம் ஆத்மிக்கு 63 இடங்களும், பாஜகவுக்கு 7 இடங்களும் கிடைத்துள்ளன. 

கடந்த சனிக்கிழமையன்று ட்வீட் செய்தருந்த மனோஜ் திவாரி,'பாஜக 48 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும்' என்று கூறியிருந்தார். 

இதுகுறித்து விளக்கம் அளித்த அவர், 48 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று தனது 6-ம் அறிவு கூறியதாக தெரிவித்தார். இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கும் முன்பாகக்கூட, 55 தொகுதிகளுக்கும் மேல் பாஜக வெற்றி பெற்றாலும் ஆச்சரியப்பட வேண்டாம் என்று அவர் கூறியிருந்தார். 

தேர்தல் முடிவு வெளியாகிக் கொண்டிருக்கும்போது கருத்து தெரிவித்த மனோஜ் திவாரி, 'கட்சி தொண்டர்கள் யாரும் தேர்தல் முடிவால் மனம் தளர்ந்து போய்விட வேண்டாம். 27 தொகுதிகளில் வாக்கு வித்தியாசம் சுமார் ஆயிரம் ஓட்டுகள்தான். எனவே எதுவேண்டுமானாலும் நடக்கும்' என்று கூறியிருந்தார். 

.