This Article is From Aug 10, 2019

காங்கிரஸ் செயற்குழு இன்று கூடுகிறது: புதிய தலைவரை தேர்வு செய்ய வாய்ப்பு!

134 ஆண்டுகள் வரலாறு கொண்ட காங்கிரஸுக்கு, நேரு - காந்தி குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர்தான் அதிக காலம் தலைவராக இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் செயற்குழு ராகுல் காந்தி தலைவராக இருந்ததற்கு முறையாக நன்றி தெரிவிக்கும் என்று தகவல்கள் கூறுகின்றுன.

New Delhi:

டெல்லியில் இன்று நடைபெற உள்ள காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டத்தில், கட்சியின் புதிய தலைவர் தேர்வு குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் படுதோல்வியை சந்தித்த நிலையில், தோல்விக்கு பொறுப்பேற்று கட்சித் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக ராகுல் காந்தி அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். 

ராகுலின் ராஜினாமாவை செயற்குழு ஏற்கமால் இருந்தது. எனினும், தனது ராஜினாமா முடிவில் ராகுல் உறுதியாக இருந்து வந்தார். தொடர்ந்து, ராகுல் ராஜினாமா செய்து இரண்டு மாதங்கள் கடந்த நிலையில் புதிய தலைவரை, விரைந்து தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தி வந்தார். 

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் இன்று தேர்வு செய்யப்பட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வந்துள்ளன. நேற்று டெல்லியில் இருக்கும் சோனியா காந்தி இல்லத்தில் மூத்த தலைவர்களான ஏ.கே.அந்தோனி, அகமது பட்டேல், கே.வி.வேணுகோபால், உள்ளிட்ட அக்கட்சியின் முக்கிய புள்ளிகள் சந்தித்ததைத் தொடர்ந்து இந்த தகவல் வந்துள்ளது. 

டெல்லியில் காங்கிரஸின் செயற்குழு கூட்டம் இன்று கூடுகிறது. அந்தக் கூட்டத்தில் இது குறித்தான அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காந்தி குடும்பத்தில் இல்லாத ஒருவர் அக்கட்சியின் தலைவராக 20 ஆண்டுகளுக்கு பின்னர் தேர்வு செய்யப்பட வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. 

134 ஆண்டுகள் வரலாறு கொண்ட காங்கிரஸுக்கு, நேரு - காந்தி குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர்தான் அதிக காலம் தலைவராக இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ராகுல் காந்தி, கட்சியின் தலைவராக இருந்து காங்கிரஸை சிறப்பாக வழிநடத்தியமைக்கு இன்று கூடும் செயற்குழு நன்றி தெரிவிக்கும் என்று தகவல் தெரிந்த வட்டாரம் நம்மிடம் கூறுகிறது. 

தலைவர் பதவிக்கு முகுல் வாஸ்னிக், மல்லிகார்ஜூன கார்கே, குமாரி செல்ஜா, சச்சின் பைலட் உள்ளிட்ட முக்கிய தலைவர்களின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளன. இவர்களில் முகுல் வாஸ்னிக்(59) தேர்வாக அதிக வாய்ப்பு உள்ளதாக கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது. 

பி.வி.நரசிம்மா ராவ் மற்றும் மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் காங்கிரசில் செயல்பட்டவர் முகுல் வாஸ்னிக், மேலும், அவர் சோனியா காந்தியின் பொதுச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். 

புதிய காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுப்பதில் தாமதமாகும் பட்சத்தில் கட்சிக்கு அது தீங்கு விளைவிக்கும் என்று காங்கிரஸ் தலைவர்கள் சஷி தரூர் உட்பட பலர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.  

.