This Article is From Jun 20, 2020

“புதிய மற்றும் ஆபத்தான கொரோனா வைரஸ் தொற்றில் சிக்கியுள்ளது உலகம்”- WHO கடும் எச்சரிக்கை

உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடாக அமெரிக்காதான் உள்ளது.

“புதிய மற்றும் ஆபத்தான கொரோனா வைரஸ் தொற்றில் சிக்கியுள்ளது உலகம்”- WHO கடும் எச்சரிக்கை

"தொடர்ந்து வீட்டிலேயே இருந்து மிக மனத் துயரத்திற்கு மக்கள் ஆளாகியுள்ளனர் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. அதே நேரத்தில் வைரஸ் தொற்று அதிவேகமாக பரவி வருகிறது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்"

ஹைலைட்ஸ்

  • சென்ற ஆண்டு டிசம்பரில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது
  • சீனாவில்தான் முதன் முதலில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பபட்டது
  • அமெரிக்காதான் உலகிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள் நாடு
Geneva, Switzerland:

உலக சுகாதார அமைப்பான WHO, உலகம் தற்போது மிக ஆபத்தான மற்றும் புதிய கொரோனா வைரஸ் தொற்றில் சிக்கியுள்ளது என்று எச்சரித்துள்ளது. பல இடங்களில் நோய்த் தொற்று அதிகரித்து வந்தாலும், லாக்டவுன் கட்டுப்பாடுகள் தளர்த்தி வருவதைச் சுட்டிக்காட்டி இப்படி கூறியுள்ளது உலக சுகாதார அமைப்பு. 

இத்தாலியில் கடந்த பிப்ரவரி மாதம்தான் முதல் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஆனால் தொடர்ந்து செய்யப்பட்ட ஆய்வின் முடிவுகள் அங்கு சென்ற ஆண்டு டிசம்பர் மாதமே கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியிருக்கலாம் என்று அதிர்ச்சிகர தகவல் வந்துள்ளது. சீனாவிலும் டிசம்பர் மாதம்தான் கொரோனா வைரஸ் இருப்பது முதன்முறையாக கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சீனாவில் இருந்துதான் கொரோனா தொற்று பரவியது என்று இதுநாள் வரை நமபப்பட்டு வந்த நிலையில் இந்தப் புதிய தகவல் அதிர்ச்சியூட்டியுள்ளது. 

இதுவரை கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்றால் 4,54,000 பேர் உயிரிழந்துள்ளார்கள். உலகம் முழுவதும் சுமார் 84 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்கா மற்றும் ஆசிய நாடுகளில் தொற்று பாதிப்பு அதிவேகமாக பரவி வருகிறது. ஐரோப்பாவின் பல நாடுகளில் போடப்பட்டிருந்த லாக்டவுன் கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

இப்படிப்பட்ட சூழலில் செய்தியாளர்களை சந்தித்த உலக சுகாதார அமைப்பின் தலைவர் அதோனம் கெப்ரியஸஸ், “இப்போதுதான் மிக ஆபத்தான மற்றும் புதிய கொரோனா தொற்றுப் பரவல் பிடியில் சிக்கியுள்ளது உலகம். தொடர்ந்து வீட்டிலேயே இருந்து மிக மனத் துயரத்திற்கு மக்கள் ஆளாகியுள்ளனர் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. அதே நேரத்தில் வைரஸ் தொற்று அதிவேகமாக பரவி வருகிறது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்,” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். 

இத்தாலியில் டிசம்பர் மாதமே, கொரோனா வைரஸ் இருந்ததற்கான சாத்தியக்கூறுகள் உறுதி செய்யப்பட்டு நிலையில், இந்த மாதம் அங்கு போடப்பட்டிருந்த லாக்டவுன் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. உலகிலேயே லாக்டவுன் உத்தரவை முதலில் பிறப்பித்தது இத்தாலிதான். பல ஐரோப்பிய நாடுகளும் கொரோனா தொற்றால் அதிகமாக பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து லாக்டவுன் கட்டுப்பாடுகளை அமல் செய்தன. அந்த நாடுகளும் இந்த மாதத் தொடக்கத்திலிருந்து கட்டுப்பாடுகளை தளர்த்தி வருகின்றன. 

இந்த முழு முடக்க நடவடிக்கையால் ஐரோப்பாவின் பெரும்பான்மையான தேசங்கள் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்றன. உலக அளவிலும் பெரும்பாலான நாடுகள் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு வர சிரமப்பட்டு வருகின்றன. 

இப்படியான சூழலில் சீன விஞ்ஞானிகள், தங்கள் நாட்டிற்கு வெளியில் இருந்துகூட கொரோனா தொற்று உருவாகியிருக்கலாம் என்று சந்தேகம் எழுப்புகிறார்கள். சீனாவில் கொரோனா வைரஸ் மிகப் பெரும் தாக்கத்தை எற்படுத்தியபோதும் கடும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மற்றும் அதிக அளவிலான சோதனைகள் மூலம் தொற்றைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். 

ஆனால் சீனாவின் தலைநகர் பீஜிங் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தற்போது கொரோனா வைரஸின் இரண்டாவது அலை பரவி வருகிறது. பலருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதனால் சில இடங்களில் மீண்டும் கடும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பல்லாயிரம் சோதனைகளும் தினம் தினம் செய்யப்பட்டு வருகின்றன. 

உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடாக அமெரிக்காதான் உள்ளது. அங்கும் மிகப் பெரும் பொருளாதாரச் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடக்க உள்ள நிலையில், இந்த தொற்று குறித்து அரசு எடுத்த நடவடிக்கைகள் பெருமளவு தேர்த்லில் எதிரொலிக்கும் எனப்படுகிறது. 

அமெரிக்காவின் பல மாகாணங்களில் தொற்றுப் பரவல் இன்னும் தீவிரமாக இருக்கிறது. ஆனால் மீண்டும் அங்கு ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கடாது என்று அரசு தரப்பு கூறுகிறது. 

அதேபோல அமெரிக்க அரசின் வல்லுநரான மருத்துவர் ஆந்தோணி ஃபவுசி, “மிக அதிக தொற்று இருக்கும் இடத்தில் மட்டும் அதிக கட்டுப்பாடுகள் விதிக்க திட்டமிட்டு வருகிறோம். அதேபோல கொரோனா தடுப்பு மருந்து குறித்த முடிவுகளும் நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றன,” என்றுள்ளார். 


 

.