This Article is From Apr 06, 2020

நியூயார்க்கில் உள்ள புலிக்கு கொரோனா தொற்று உறுதியானது; மனிதர்களிடமிருந்து பரவியதா..?

கடந்த மார்ச் மாதம் பெல்ஜியம் நாட்டில் ஒரு பூனைக்குக் கொரோனா தொற்று இருந்தது தெரியவந்தது

நியூயார்க்கில் உள்ள புலிக்கு கொரோனா தொற்று உறுதியானது; மனிதர்களிடமிருந்து பரவியதா..?

சீனாவின் உஹான் நகரத்திலிருந்த ஒரு மிருக சந்தையில் விற்கப்பட்ட காட்டு விலங்கிலிருந்துதான், கொரோனா வைரஸ் தொற்று மனிதர்களுக்குப் பரவியது என்று சீன நோய் தடுப்பு அமைப்பு முன்னர் தெரிவித்தது.  

ஹைலைட்ஸ்

  • அமெரிக்காவில் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு
  • நியூயார்க்கில் மட்டும் இதுவரை 4,000 பேர் இறந்துள்ளனர்
  • அமெரிக்காவில் தொடர்ந்து கொரோனா தொற்று வேகமாக பரவிவருகிறது
New York, United States:

அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள பிராங்ஸ் (Bronx) உயிரியல் பூங்காவில் இருக்கும் ஒரு புலிக்குக் கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. புலியை கவனித்து வந்தவரிடத்திலிருந்து நோய் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. 

பிராங்ஸ் உயிரியல் பூங்காவில் உள்ள 4 வயதான மலாயன் புலி நடியா என்பதற்குத்தான் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைத் தவிர நடியாவின் சகோதரி அசூல், 2 அமுர் புலிகள், 3 ஆப்ரிக்க சிங்கங்களுக்கு சமீப நாட்களாக வறட்டு இருமல் இருக்கிறதாம். அனைத்து மிருகங்களும் விரைவில் இந்த பாதிப்பிலிருந்து மீண்டு வரும் என்று உயிரியல் பூங்கா நிர்வாகம் நம்பிக்கை தெரிவிக்கிறது. 

இது குறித்து பூங்கா நிர்வாகம், “பாதிக்கப்பட்ட புலிக்கு அதிகமாக நோய் அறிகுறிகள் இருந்ததனால், அதற்கு கோவிட்-19 பரிசோதனை செய்தோம். அதில் கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இந்த விஷயத்தில் எங்களுக்குக் கிடைக்கும் தகவல்களை தொடர்ந்து பகிர்ந்து கொள்வோம். இதன் மூலம் இந்த நோவல் கொரோனா வைரஸ் தொற்று குறித்து மேலும் அறிந்து கொள்ள முடியும்.

நோய் அறிகுறிகள் இருக்கும் இந்த மிருகங்களுக்கு சற்று பசியின்மை ஏற்பட்டிருந்தாலும், தொடர்ந்து நல்ல ஆரோக்கியத்தோடுதான் இருந்து வருகின்றன.

கொரோனா தொற்றுக்கு ஒவ்வொரு உயிரினமும் ஒவ்வொரு வகையில் நடந்து கொள்கின்றன. எனவே இந்த பெரிய வகை பூனைகள் இந்த நோய்க்கு எப்படி எதிர்வினையாற்றும் எனத் தெரியவில்லை. இது குறித்து தொடர்ந்து மேற்பார்வையிடுவோம். அனைத்து மிருகங்களும் முற்றிலும் குணமாகிவிடும் என்று நம்புகிறோம்,” என்று உயிரியல் பூங்கா வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நியூயார்க்கில் உள்ள 4 உயிரியல் பூங்காக்கள் மற்றும் அக்வாரியம் கடந்த மார்ச் 16 ஆம் தேதியிலிருந்து மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நியூயார்க் நகரத்தில் மட்டும் இதுவரை கொரோனா தொற்று காரணமாக 4,000 பேர் இறந்துள்ளனர். 

விலங்குகளிலிருந்து கொரோனா பரவுகிறதா என்பது குறித்து உயிரியல் பூங்கா நிர்வாகம், “கோவிட்-19 பரவுவதற்கு விலங்குகள் காரணமாக இருக்கின்றனவா என்பது குறித்து எந்த ஆதாரமும் இல்லை. உஹான் சந்தையில் நடந்த சம்பவத்திற்குப் பின்னர் எந்த ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை,” என்றுள்ளது. 

சீனாவின் உஹான் நகரத்திலிருந்த ஒரு மிருக சந்தையில் விற்கப்பட்ட காட்டு விலங்கிலிருந்துதான், கொரோனா வைரஸ் தொற்று மனிதர்களுக்குப் பரவியது என்று சீன நோய் தடுப்பு அமைப்பு முன்னர் தெரிவித்தது.  

அமெரிக்காவில், செல்லப் பிராணிகள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது குறித்து இதுவரை எந்தத் தகவலும் வரவில்லை என்று சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் செல்லப் பிராணிகளிடமிருந்து இந்த நேரத்தில் தள்ளியிருப்பது நல்லது என்றும் அறிவுறுத்தப்படுகிறது. 

கடந்த மார்ச் மாதம் பெல்ஜியம் நாட்டில் ஒரு பூனைக்குக் கொரோனா தொற்று இருந்தது தெரியவந்தது. அதேபோல ஹாங் காங்கிலும் 2 நாய்களுக்கு கொரோனா தொற்று வந்தது குறிப்பிடத்தக்கது. 

இந்த அனைத்து மிருகங்களுக்கும் தங்கள் உரிமையாளர்களிடமிருந்துதான் வைரஸ் தொற்றுப் பரவியது எனத் தெரிகிறது. 

.