
முன்னதாக அசாமின் பாஜக எம்எல்ஏ ஒருவர், மாட்டு மூத்திரம் மற்றும் மாட்டுச் சாணி மூலம் கொரோனாவை குணப்படுத்தலாம் என்றார்.
ஹைலைட்ஸ்
- சீனாவின் உஹான் நகரத்தில்தான் கொரோனா வைரஸ் உருவானது
- தற்போது 145 நாடுகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது
- இதுவரை 9,000-க்கும் அதிகமானோர் கொரோனாவால் இறந்துள்ளனர்
கொரோனா வைரஸ் என்பது நாளுக்கு நாள் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்து வரும் நிலையில், அதிலிருந்து தற்காத்துக் கொள்ள மத்திய சுகாதாரத் துறையின் இணை அமைச்சர் அஷ்வினி சவுபி, வினோதமான அறிவுரையை வழங்கியுள்ளார்.
“சூரிய ஒளியில் அமர்ந்திருந்தால், அதனால் உடலில் எதிர்ப்புச் சக்தி அதிகரித்து கொரோனா வைரஸ் அழிக்கப்படும்,” என்று கூறியுள்ளார் அமைச்சர் அஷ்வினி. முன்னதாக இவர்தான், “மாட்டு மூத்திரம் குடித்தால் புற்று நோய் குணமாகும்,” என்று கூறி அதிரவைத்தார்.
ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம், கொரோனா குறித்துப் பேசிய அமைச்சர் அஷ்வினி, “காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை, சூரியன் மிக வெப்பமான ஒளிக் கதிர்களை வெளியிடும். அப்போது நாம் 15 நிமிடம் சூரிய ஒளியில் அமர்ந்திருந்தால், நம் உடலில் வைட்டமின் டி அதிகரிக்கும். இதனால் உடலில் எதிர்ப்புச் சக்தியும் அதிகரித்து, கொரோனா வைரஸை அழித்துவிடும்,” என்று கருத்து தெரிவித்துள்ளார்.
#WATCH Union Minister of State for Health and Family Welfare Ashwini Kumar Choubey: People should spend at least 15 minutes in the sun. The sunlight provides Vitamin D, improves immunity and also kills such (#Coronavirus) viruses. pic.twitter.com/F80PX6VOmy
— ANI (@ANI) March 19, 2020
நேற்றுதான் பிரதமர் நரேந்திர மோடி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள், கொரோனா வைரஸ் விவகாரத்தில் அறிவியலுக்குப் புறம்பான தகவல்களைச் சொல்லக் கூடாது என்று அறிவுறுத்தியிருந்தார்.
அதேபோல, மத்திய சுகாதாரத் துறை அமைச்சகமும், கொரோனாவிலிருந்து தற்காத்துக் கொள்ள 3 பக்க அறிவிக்கையை வெளியிட்டிருந்தது. அதில், வைட்டமின் டி மற்றும் சூரிய ஒளியால் கொரோனாவை எதிர்கொள்ளலாம் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை.
சூரிய வெளிச்சம் மூலம் வைட்டமின் டி கிடைக்கும் என்பது உண்மைதான் என்றாலும், அதனால் கோவிட்-19 எனப்படும் கொரோனா வராமல் பார்த்துக் கொள்ளலாம் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
கொரோனாவிலிருந்து தற்காத்துக் கொள்ள, மற்றவர்களுக்கு அருகில் போகாமல் இருத்தல், கைகளை அடிக்கடி கழுவுதல், சுகாதாரமாக இருத்தல் உள்ளிட்ட அறிவுரைகளைத்தான் மருத்துவ வல்லுநர்கள் சொல்லி வருகின்றனர்.
கொரோனா வைரஸுக்கு இதுவரை மருந்து கண்டறியப்படவில்லை. ஆனால், உலகின் பல்வேறு இடங்களில் கொரோனாவுக்கு எதிரான மருந்து கண்டுபிடிக்கத் தீவிரமாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கொரோனா வைரஸ் அதிவேகமாகப் பரவி வரும் நிலையில், அது குறித்து சில வினோதமான அறிவுரைகள் வந்த வண்ணம் உள்ளன. முன்னதாக அசாமின் பாஜக எம்எல்ஏ ஒருவர், மாட்டு மூத்திரம் மற்றும் மாட்டுச் சாணி மூலம் கொரோனாவை குணப்படுத்தலாம் என்றார்.
இதுவரை இந்தியாவில் 170 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 9 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இதனால் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கொரோனாவுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சர்வதேச எல்லைகளை மூடியுள்ளது இந்திய அரசு. மாநில அரசுகளும், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்துள்ளன. மேலும் கேளிக்கை விடுதிகள், திரையரங்குகள் மற்றும் மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களை மூட உத்தரவிட்டுள்ளன.
With input from ANI