This Article is From May 26, 2020

காணாமல் போனவரை 2 ஆண்டுகளுக்கு பின்னர் குடும்பத்துடன் சேர்த்து வைத்த 'டிக் டாக்' வீடியோ!

வெங்கடேஸ்வரலுவுக்கு காது கேட்காது; பேசவும் முடியாது. இதனால் அவருக்கு என்ன ஆனதோ என்ற பதட்டத்தில் குடும்பத்தினர் இருந்தனர். நீண்ட நாட்கள் ஆனதால் அவர் உயிரிழந்திருக்க கூடும் என்று கருதி அவருக்கு இறுதிச் சடங்குகளையும் குடும்பத்தினர் செய்து முடித்தனர். 

காணாமல் போனவரை 2 ஆண்டுகளுக்கு பின்னர் குடும்பத்துடன் சேர்த்து வைத்த 'டிக் டாக்' வீடியோ!

வெங்கடேஸ்வரலு 2018 ஏப்ரல் மாதம் காணாமல் போனார்

Ludhiana:

2 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன வாய்பேச முடியாத, காதுகேட்காத நபரை, குடும்பத்துடன் சேர்த்து வைத்துள்ளது ஒரு டிக் டாக் வீடியோ. தெலங்கானாவில் நடந்திருக்கும் இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

தெலங்கானா மாநிலம் பத்ராத்தி கோதகுடம் மாவட்டத்தை சேர்ந்தவர் ரோதம் வெங்கடேஸ்வரலு. இவர் கடந்த 2018 ஏப்ரல் மாதம் காணாமல் போனார். 

இதுபற்றி போலீசிடம் வெங்கடேஸ்வரலுவின் குடும்பத்தினர் புகார் அளித்தனர். ஆனால் எவ்வளவு தேடியும், அவர் கிடைக்கவில்லை. 

இங்கு குறிப்பிடப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், வெங்கடேஸ்வரலுவுக்கு காது கேட்காது; பேசவும் முடியாது. இதனால் அவருக்கு என்ன ஆனதோ என்ற பதட்டத்தில் குடும்பத்தினர் இருந்தனர். நீண்ட நாட்கள் ஆனதால் அவர் உயிரிழந்திருக்க கூடும் என்று கருதி அவருக்கு இறுதிச் சடங்குகளையும் குடும்பத்தினர் செய்து முடித்தனர். 

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பாக பஞ்சாப் மாநிலம் லூதியானாவில், பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உணவு விநியோகம் செய்யப்பட்டது. இதனை போலீஸ் கான்ஸ்டபிள் அஜய் சிங் விடியோ எடுத்து டிக்டாக்கில் வெளியிட்டுள்ளார். 

வெங்கேடஸ்வரலுவின் கிராமத்தை சேர்ந்த ஒருவர் கடந்த வியாழன் அன்று இந்த வீடியோவை பார்த்து, இது அவர்தானா என்பதை உறுதி செய்ய, வெங்கடேஸ்வரலுவின் மகள் கனகதுர்காவிடம் காண்பித்துள்ளார். இதில், 2 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன தனது தந்தைதான் என்பதை துர்கா உறுதி செய்தார். 

இதையடுத்து பஞ்சாபுக்கு விரைந்த வெங்கடேஸ்வரலுவின் மகன் பெட்டிராஜு, லூதியானா போலீஸ் இணை கமிஷனரை பார்த்து நடந்தவற்றை கூறியுள்ளார். இதன்பின்னர் போலீஸ் உதவியுடன் வெங்கேடஸ்வரலு கண்டுபிடிக்கப்பட்டார். தந்தையும், மகனும் சந்தித்துக்கொண்டபோது கண்ணீர் விட்டு அழுது பாசத்தை பகிர்ந்து கொண்டனர். தற்போது குடும்பத்தினருடன் வெங்கடேஸ்வரலு இணைந்துள்ளார்.

இறந்துவிட்டார் என்று எண்ணி இறுதிச் சடங்கு முடித்த நிலையில், வெங்கடேஸ்வரலு ஊர் திரும்பிய சம்பவம் தெலங்கானாவில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. 

.