This Article is From Jul 09, 2020

கொரோனா: கேரளாவின் சூப்பர்-ஸ்ப்ரெடர் கிராமத்தில் பாதுகாப்பு கமாண்டோக்கள்!

இக்கிராமத்தில் ஐந்து நாட்களில் சோதனை செய்யப்பட்ட 600 பேரில் மொத்தம் 119 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என முதலமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கொரோனா: கேரளாவின் சூப்பர்-ஸ்ப்ரெடர் கிராமத்தில் பாதுகாப்பு கமாண்டோக்கள்!

கொரோனா வைரஸ்: மக்கள் பாதுகாப்பு விதிகளுக்குக் கீழ்ப்படிவதை உறுதி செய்வதற்காக கிராமத்தில் 25 கமாண்டோக்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்

Thiruvananthapuram:

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் எண்ணிக்கையானது 7.67 லட்சமாக உயர்ந்திருக்கக்கூடிய நிலையில் பல மாநிலங்கள் தங்கள் மாநிலங்களில் தொற்று பரவலை கட்டுப்படுத்த பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு கடலோர கிராமத்தில் தொற்று பரவல் மையம் கண்டறியப்பட்டுள்ளது. சுகாதார வல்லுநர்கள் கூறுகையில், மாநிலத்தில் வளர்ந்து வரும் முதல் கிளஸ்டர் என்று குறிப்பிட்டுள்ளனர்.

நேற்று வெளியான வீடியோ ஒன்றில் கமாண்டோக்கள், ஆம்புலன்ஸ்கள் மற்றும் பொலீஸ் வாகனங்கள் பூந்துரா கிராமத்தின் வெவ்வேறு வார்டுகள் ரோந்து பணிகளில் ஈடுபட்டிருப்பதை காண முடியும். இவர்கள் "மக்கள் தேவையில்லாமல் சுற்றித் திரிந்தால், அவர்கள் கமாண்டோக்களின் உதவியோடு ஆம்புலன்சில் ஏற்றப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.” என ஒலி பெருக்கியில் அறிவித்தவாறு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஒரே பகுதியை சேர்ந்த அல்லது குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேருக்கும் அதிகமானவர்கள் கொரோனா தொற்றால் ஒரே நேரத்தில் பாதிக்கப்பட்டிருப்பது சூப்பர்-ஸ்ப்ரெடர் என அழைக்கப்படுகிறது. புன்தூராவில், கேரளாவில் உருவாகும் முதல் கிளஸ்டர் இது என்றும், பல சூப்பர் ஸ்ப்ரெடர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்றும் சுகாதார நிபுணரும், சுகாதார அணியின் முக்கிய உறுப்பினருமான டாக்டர் முகமது ஆஷீல் என்டிடிவிக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

முதலில் தொடர்பு தடமறிதலில்தான் இந்த கிராமத்தைச் சேர்ந்த மீன் வியாபாரி ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த கிராமத்தின் சில வார்ட்டுகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக மாற்றப்பட்டுள்ளன.

இக்கிராமத்தில் ஐந்து நாட்களில் சோதனை செய்யப்பட்ட 600 பேரில் மொத்தம் 119 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என முதலமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கிராமத்தில் போதுமான பரிசோதனைகளும், போதுமான மருத்துவமனை படுக்கைகளும் உள்ளதாக கேரள அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார். மேலும், தொற்று உறுதி செய்யப்படும் நபர்கள் உடனடியாக மருத்துவமனைகளுக்கு மாற்றப்படுகிறார்கள் என்றும் கிராமத்தின் ஒரு சில வார்டுகளில் இந்த பரவல் பெரும்பாலும் உள்ளது. தற்போது ஆறு சுகாதார குழுக்கள் சோதனை செய்கின்றன, தொற்று பாதிப்பு எண்ணிக்கையை பொறுத்து பரிசோதனை எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என அமைச்சர் கூறியுள்ளார்.

கிராமத்திலிருந்து தமிழகத்திற்கு செல்லவோ அல்லது அங்கிருந்து படகுகளில் திரும்பவோ யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், இதனை உறுதி செய்திட கடலோர காவல்படை, கடலோர பாதுகாப்பு மற்றும் கடல் அமலாக்க பிரிவு ஆகியவை கடற்கரையில் கண்காணிப்பில் ஈடுபட்டிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரத்தில் மீன்பிடி நடவடிக்கைகள் எதுவும் அனுமதிக்கப்படாது என்று திருவனந்தபுரம் மாவட்ட ஆட்சியர் நவஜோத் கோசா தெரிவித்துள்ளார்.

கிராமத்தில் நுழைவு மற்றும் வெளியேறும் இடங்கள் சீல் வைக்கப்பட்டுள்ளதால், மூன்று வார்டுகளில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 5 கிலோ அரிசி வழங்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. புன்தூரா கிராமத்தின் பிரதான தொழில் மீன்பிடித்தல் என்பது குறிப்பிடத்தக்கது.

கேரளாவை பொறுத்த அளவில் ஒட்டுமொத்த பாதிப்பானது 6,195 ஆக உள்ளது. இதுவரை 27 பேர் உயிரிழந்ததுள்ளனர். 3599 பேர் குணமடைந்துள்ளனர். 2,609 சிகிச்சை பெற்று வருகின்றனர்.

.