This Article is From Apr 15, 2020

பால்கனி அரசே களத்தில் நடப்பதையும் கவனத்தில் கொள்க: கமல்ஹாசன் எச்சரிக்கை

பால்கனியில் உள்ளவர்கள் களத்தில் நிகழும் நீண்ட மற்றும் கடினமான சூழலை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

பால்கனி அரசே களத்தில் நடப்பதையும் கவனத்தில் கொள்க: கமல்ஹாசன் எச்சரிக்கை

கமல்ஹாசன் மத்திய அரசுக்கு கடும் எச்சரிக்கை

ஹைலைட்ஸ்

  • பால்கனி அரசே களத்தில் நடப்பதையும் கவனத்தில் கொள்க
  • முதலில் டெல்லியில் நடந்த சம்பவம் தற்போது, மும்பையிலும் நிகழ்ந்துள்ளது.
  • வெளிமாநில தொழிலாளர்களின் நெருக்கடி என்பது டைம் பாம் போன்றது.
Chennai:

வெளிமாநில தொழிலாளர்கள் விஷயத்தில் பால்கனி அரசாங்கம் களத்தில் என்ன நடக்கிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் என மத்திய அரசுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த மார்ச்.24ம் தேதியன்று, நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், பல்வேறு பெரும் நகரங்களில் உள்ள வெளிமாநில கூலித் தொழிலாளர்கள் எந்தவித வருமானமும் இல்லாமல், தங்களது சொந்த ஊருக்கும் செல்ல முடியாமல் கடந்த 3 வாரங்களாக தவித்து வந்தனர். 

இந்நிலையில், 21 நாள் ஊரடங்கு நேற்றுடன் முடிவடையும், என்றும் மீண்டும் அனைத்து போக்குவரத்துகளும் இயங்கும் என்று நினைத்து மும்பையின் பாந்த்ரா பகுதியில் ஆயிரக்கணக்கான வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர் செல்வதற்காக கூடினர். 

இதனிடையே, பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் மே.3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக நேற்று காலை அறிவித்தார். இதனால் தாங்கள் கடுமையாக பாதிப்பு அடைவோம் என்று கூறியும், தங்களை சொந்த மாநிலத்திற்கு அழைத்துச் செல்ல வலியுறுத்தியும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுட்டனர். 

இதையடுத்து, போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போராட்டக்காரர்களைக் கலைத்தனர். கொரோனாவை கட்டுப்படுத்த சமூக விலகலை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வரும் நிலையில், ஒரே இடத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கூடியது அரசுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் தொடர்பாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மத்திய அரசுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுபோன்ற வெளிமாநில தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டியதன் அவசியத்தையும் அவர் எடுத்துரைத்துள்ளார். மேலும், அவர் டெல்லியில் இதேபோன்று சில நாட்கள் முன்பு நடந்த சம்பவத்தையும் நினைவு கூர்ந்துள்ளார். 

இதுதொடர்பாக அவரது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, பால்கனியில் உள்ளவர்கள் களத்தில் நிகழும் நீண்ட மற்றும் கடினமான சூழலை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். முதலில் டெல்லியில் நடந்த சம்பவம் தற்போது, மும்பையிலும் நிகழ்ந்துள்ளது. வெளிமாநில தொழிலாளர்களின் நெருக்கடி என்பது டைம் பாம் போன்றது. கொரோனாவை விட பெரும் நெருக்கடியாக உருவெடுப்பதற்கு முன்பு அதனை சரிசெய்ய வேண்டும். பால்கனி அரசாங்கம் களத்தில் என்ன நடக்கிறது என்பது குறித்தும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். 

கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட இந்த ஊரடங்கு உத்தரவால், நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளிலும் உள்ள கோடிக்கணக்கான தினக் கூலித் தொழிலாளர்களை பெரும் நெருக்கடியில் ஆழ்த்தியுள்ளது. இதனால் பலரும் உணவு மற்றும் தங்குமிடம் இல்லாமல் தவித்து வருகின்றனர். ஆயிரக்கணக்கான வெளிமாநில தொழிலாளர்கள் பட்டினி கிடக்க வேண்டும் என்று அஞ்சி, தங்களது ஊர்களுக்கு நடந்தே சென்றனர். 

.