This Article is From Mar 30, 2020

உ.பி திரும்பிய இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது கிருமிநாசினி தெளிப்பு! அதிர்ச்சி வீடியோ

கடந்த வார இறுதியில் இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர் திரும்ப சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டது. அதன் மூலம், சொந்த ஊர் திரும்பிய தொழிலாளர்கள் குழு மீது இவ்வாறு கிருமிநாசினி தெளிக்கப்பட்டுள்ளது. 

உ.பி திரும்பிய இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது கிருமிநாசினி தெளிப்பு! அதிர்ச்சி வீடியோ

அந்த வீடியோவில் இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது கிருநாசினி தெளிக்கப்படுகிறது.

ஹைலைட்ஸ்

  • உ.பி திரும்பிய இடம்பெயர் தொழிலாளர்கள் மீது கிருமிநாசினி தெளிப்பு!
  • ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு நடந்து சென்றனர்
  • சுற்றி நிற்கும் போலீசாரும் அதனை வேடிக்கை பார்த்தபடி நிற்கின்றனர்.
Bareilly, UP:

உத்தர பிரதேசத்தில் சொந்த ஊர் திரும்பிய இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது கிருமிநாசனி தெளிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கொரோனா வைரஸ் பரவலை கட்டுபடுத்தும் வகையில் நாடு தழுவிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆயிரக்கணக்கான இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு நடந்து சென்று வருகின்றனர். 

இந்நிலையில், லக்னோவில் இருந்து 270 கி.மீ தொலைவில் உள்ள உத்தர பிரதேசத்தின் பாரேலி மாவட்டத்தில் தங்கள் சொந்த ஊர் திரும்பிய இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது கிருமிநாசினிகள் தெளிக்கும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

இதுதொடர்பான அந்த வீடியோவில், பாதுகாப்பு உடை அணிந்த சிலர் பெண்கள், குழந்தைகள் உட்பட ஒரு குழுவாக உள்ள இடம்பெயர் தொழிலாளர்களை சாலையில் அமர வைத்து அவர்கள் மீது கிருமிநாசினிகள் தெளிக்கின்றனர். கடந்த வார இறுதியில் இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர் திரும்ப சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டது. அதன் மூலம், சொந்த ஊர் திரும்பிய தொழிலாளர்கள் குழு மீது இவ்வாறு கிருமிநாசினி தெளிக்கப்பட்டுள்ளது. 

அந்த வீடியோவில் ஒருவர், உங்களது கண்களை மூடிக்கொள்ளுங்கள், குழந்தைகளின் கண்களையும் மூடிவிடுங்கள் என்கிறார். இந்த சம்பவம் நடக்கும் இடத்தை சுற்றி நிற்கும் போலீசாரும் அதனை வேடிக்கை பார்த்தபடி நிற்கின்றனர். 

இந்த சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி தனது ட்வீட்டர் பதிவில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், நாம் அனைவரும் ஒன்றிணைந்து (கொரோனா வைரஸ்) இந்த நெருக்கடிக்கு எதிராக போராடி வருகிறோம். தயவு செய்து இதுபோன்ற மனிதாபிமானமற்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என உத்தர பிரதேச அரசை நான் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். 

தொழிலாளர்கள் ஏற்கனவே நிறைய கஷ்டத்தை எதிர்கொண்டுள்ளனர். அவர்கள் மீது ரசாயணங்களை தெளிக்க வேண்டாம். அது அவர்களை பாதுகாக்காது. மாறாக அந்த ரசாயனங்கள் அவர்களது உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அதிகாரி ஒருவர் கூறும்போது, நாங்கள் மனிதாபிமானமற்ற முறையில் நடந்துகொள்ள வேண்டும் என்று நினைக்கவில்லை.  அனைவரையும் தூய்மைப்படுத்துவது என்பது முக்கியமானது, அதில் அவசரம் ஏற்பட்டது. எனவே நாங்கள் இதனை சிறந்த வழி என்று நினைத்துச் செய்தோம், என்று அவர் தெரிவித்துள்ளார். 

.