Coronavirus Cases India: நாடு முழுவதும் கடந்த வாரம் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தது.
ஹைலைட்ஸ்
- இந்தியாவில் அதிகபட்சமாக ஒரே நாளில் 12 பேர் பலி, 601 பேருக்கு பாதிப்பு
- நாடு முழுவதும் கடந்த வாரம் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தது.
- இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 68 பேர் உயிரிழப்பு
New Delhi: சர்வதேச அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்து வரக்கூடிய நிலையில், இந்தியாவில் மூவாயிரம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். 75 பேர் இந்த தொற்றால் மரணமடைந்திருப்பதாக சுகாதாரத்துறை சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
சனிக்கிழமையன்று மட்டும் 525 பேர் தொற்று இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். 13 பேர் இறந்துள்ளனர். இந்த நிலையில் தற்போதைய நிலவரப்படி 77 பேர் இறந்திருக்கின்றனர். தொற்று உள்ளவர்களாக மொத்தமாக 3374 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதுவரை கொரோனா தொற்றால் அடையாளம் காணப்பட்டுள்ள நபர்களில் 30 சதவிகிதமானோர் தப்லீக் ஜமாத் நிகழ்வோடு தொடர்புடையவர்களாவார்கள். சர்வதேச அளவில் இந்த தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1 மில்லியனை கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா தொற்று குறித்த முக்கியத் தகவல்கள்:
- தேசிய தலைநகர் டெல்லியின் வடக்கு பகுதியில் நூறு ஆண்டுகள் பழமையான மசூதி வளாகத்தில் தப்லீக் ஜமாத் என்கிற அமைப்பு சார்பில் இஸ்லாமிய கொள்கை பரப்பு மாநாடு நடைபெற்றது. இதில் கிட்டதட்ட 20 ஆயிரம் பேர் கலந்துகொண்டனர். கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட நாடுகளைச் சேர்ந்த பலரும் இதில் பங்கேற்றுள்ளனர். இதில் பங்கேற்று தொற்றுக்கு ஆளானவர்கள், தேசிய அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்காக உள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதில் பங்கேற்று திரும்பியவர்கள் 13 மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் இருந்து பங்கேற்று இருந்ததனால் இந்த மாநிலங்களிலும் தொற்று பரவலுக்கு இவர்கள் காரணமாக இருந்துள்ளனர்.
- தமிழ்நாடு, டெல்லி, ஆந்திரா, தெலுங்கானா, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர், அசாம், கர்நாடகா, அந்தமான் மற்றும் நிக்கோபார், உத்தரகண்ட், ஹரியானா, மகாராஷ்டிரா, இமாச்சல பிரதேசம் மற்றும் ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களிலிருந்து பெரும்பாலானோர் இந்த இஸ்லாமியக் கொள்கை பரப்பு மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.
- தமிழகத்தில் சனிக்கிழமை 74 பேர் கொரோனா தொற்று உள்ளவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் 73 பேர் டெல்லி தப்லீக் ஜமாத் நிகழ்வில் பங்கேற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகமானது கொரோனா தொற்றால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள மாநிலமாகும். ஏற்கெனவே ஒருவர் மட்டும் கொரோனா தொற்றுக்கு தமிழகத்தில் உயிரிழந்திருந்த நிலையில், சமீபத்தில் நேற்று (சனிக்கிழமை) ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். டெல்லி நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு 1200 பேர் தமிழகம் திரும்பியிருந்தனர்.
- இதேபோல ஆந்திர மாநிலத்தில் கொரோனா தொற்று உள்ளவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ள நபர்களில் 87 சதவிகிதம் பேர் டெல்லி தப்லீக் ஜமாத் நிகழ்ச்சியுடன் தொடர்புடையவர்கள் ஆவர்கள். உத்தரப் பிரதேசத்திலும் 27 மாவட்டங்களில் கொரோனா தொற்றல் பாதிக்கப்பட்டவர்கள் டெல்லி நிகழ்ச்சியோடு தொடர்புடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும், வடகிழக்கு மாநிலங்களில் பாதிக்கப்பட்டுள்ள 29 பேரில் 26 பேர் டெல்லி நிகழ்ச்சியோடு தொடர்புடையவர்கள்.
- ஒரு சதுர கிலோமீட்டரில் கிட்டதட்ட 1 மில்லியன் மக்கள் வாழக்கூடிய, ஆசியாவின் மிகப்பெரிய குடிசைவாழ் பகுதியான மும்பை தாராவியில் கொரோனா தொற்று பரவிவருகின்றது. கடந்த நான்கு நாட்களில் 5 பேர் தொற்றுக்கு ஆளாகியிருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
- 50 கோடி ஆயுஷ்மான் பாரத் சுகாதார காப்பீட்டு திட்ட பயனாளிகளுக்கு இலவச கொரோனா வைரஸ் பரிசோதனை மற்றும் சிகிச்சை வசதிகளை மத்திய அரசு வழங்கும் என்று தேசிய சுகாதார ஆணையம் இன்று தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தை அரசு அமைப்பு, தனியார் ஆய்வகங்கள் மற்றும் காப்பீட்டு திட்டத்தோடு இணைக்கப்பட்ட மருத்துவமனைகள் மக்களுக்கு இலவச சேவையை வழங்கும்.
- சமீபத்தில் அமெரிக்க ஜனாதிபதியுடன் தொலைப்பேசியில் கலந்துரையாடிய மோடி, கொரோனா தொற்றை எதிர்த்துப் போராட அமெரிக்காவுக்கு இந்தியா துணை நிற்கும் என்றும், மேலும் இந்த இரு நாடுகளின் கூட்டாண்மை பலத்தினை பயன்படுத்தி இதனை முறியடித்திடுவோம் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
- தேசிய அளவில் கொரோனா தொற்றினை எதிர்கொள்வதற்கான தயாரிப்புகளை உறுதிப்படுத்த 11 குழுக்கள் உருவாக்கப்பட்டது. இந்த குழுக்களோடு பிரதமர் கலந்துரையாடலை மேற்கொண்டார். அணைத்து மாநிலங்களிலும், தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள், முகமூடிகள், கையுறைகள் மற்றும் வென்டிலேட்டர்கள் போன்ற அத்தியாவசிய மருத்துவ உபகரணங்கள் கிடைப்பதை உறுதி செய்யுமாறு பிரதமர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியதாக, அவரது அலுவலகம் ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளது.
- உத்தரப் பிரதேசத்தில் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தப்லீக் ஜமாத் அமைப்பை சேர்ந்தவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. காசியாபாத் மருத்துவமனையில் செவிலியர்கள் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டுகளுக்காக இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய உத்தரவிட்டபோது, முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்களை "மனிதக்குலத்தின் எதிரிகள்" என்று கடுமையாக விமர்சித்தார்.
- சர்வதேச அளவில் கொரோனா தொற்றினை சமாளிக்க உலக வங்கி 1.9 பில்லியன் டாலர் நிதியினை 25 நாடுகளுக்கு ஒதுக்கியுள்ளது. இதில் பெரும் பகுதி அதாவது 1 பில்லியன் டாலர் நதியானது இந்தியாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக பாதிக்கப்பட்டோரின் தொடர்புகளை கண்டறியவும், புதிய தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளை உருவாக்கவும் தனிப்பட்ட உபகரணங்களை வாங்கவும் பயன்படுத்த வேண்டும் என்று சர்வதேச நிதி நிறுவனம் தெரிவித்துள்ளது.