This Article is From Mar 30, 2020

தொழிலாளர்களிடம் ஒரு மாதம் வீட்டு வாடகை வாங்கக் கூடாது: மத்திய அரசு

தொழிலாளர்களுக்கு எவ்வித பிடித்தமும் செய்யாமல் அப்படியே ஊதியத்தை வழங்க வேண்டும் என தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

தொழிலாளர்களிடம் ஒரு மாதம் வீட்டு வாடகை வாங்கக் கூடாது: மத்திய அரசு

Coronavirus: டெல்லி ஆனந்த் விஹாரில் குவிந்த ஆயிரக்கணக்கான இடம்பெயர் தொழிலாளர்கள்.(File)

ஹைலைட்ஸ்

  • டெல்லி ஆனந்த் விஹாரில் குவிந்த ஆயிரக்கணக்கான இடம்பெயர் தொழிலாளர்கள்.
  • தொழிலாளர்களிடம் ஒரு மாதம் வீட்டு வாடகை வாங்கக் கூடாது
  • எவ்வித பிடித்தமும் செய்யாமல் அப்படியே ஊதியத்தை வழங்க வேண்டும்
New Delhi:

21 நாட்கள் ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களிடம் இருந்து ஒரு மாதத்திற்கு வீட்டு வாடகை வாங்கக் கூடாது என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

கொரோனா பரவலை கட்டுபாட்டுக்குள் கொண்டு வரும் வகையில் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. இதனால், வேலையிழந்து, அத்தியாவசிய தேவைகள் எதுவுமின்றி தவித்து வரும் ஆயிரக்கணக்கான இடம்பெயர் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல டெல்லி பேருந்து நிலையத்தில் குவிந்தனர். 

இதைத்தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சகம் இடம்பெயர் தொழிலாளர்களுக்கு தங்குமிடமும், உணவும் வழங்கக்கோரி மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், ஏற்கனவே சொந்த ஊர்களுக்கு சென்ற புலம்பெயர் தொழிலாளர்களை 2 வாரங்களுக்கு தனிமைப்படுத்தி வைக்கவும் உத்தரவிட்டுள்ளது. 

இதேபோல், தொழிலாளர்களுக்கு எவ்வித பிடித்தமும் செய்யாமல் அப்படியே ஊதியத்தை வழங்க வேண்டும் என தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 

இதுதொடர்பாக மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், இடம் பெயர்ந்த வெளிமாநில தொழிலாளர்கள் உள்ளிட்ட தொழிலாளர்களிடம் ஒரு மாதத்திற்கான வாடகையை வீட்டு உரிமையாளர்கள் வாங்க கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் வீட்டு உரிமையாளர்கள் தம்மிடம் வாடகைக்கு இருக்கும் தொழிலாளர்களையும் மாணவர்களையும் வலுக்கட்டாயமாக வெளியே அனுப்பக் கூடாது என்றும் இந்த உத்தரவுகளை மீறினால் அவர்கள் மீது மாநில அரசுகள் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

ஊரடங்கை காரணம் காட்டி தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்களில் பணிபுரிவோருக்கான ஊதியத்தில் நிர்வாகங்கள் எவ்வித பிடித்தமும் செய்யாமல் அப்படியே வழங்க வேண்டும் என்றும் உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட வெளிமாநில தொழிலாளர்கள் உள்ளிட்ட ஏழைகளுக்கு உணவு, இருப்பிட வசதிகள் செய்து தர வேண்டும் எனவும் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்கள், சொந்த ஊர்களுக்குச் செல்ல வெளியேறியவர்கள், குறைந்தபட்சம் 14 நாட்களுக்கு முறையாக சோதனையிடப்பட்டு பின்னர் அந்தந்த மாநில, யூனியன் பிரதேச அரசுகள் அமைத்துள்ள தனிமைப்படுத்தல் முகாம்களில் தங்கவைக்கப்பட வேண்டும் என மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

.