டெல்லி தப்லீக் மாநாட்டில் பங்கேற்றதை மறைத்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் கவுன்சிலருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவரது கவனக்குறைவால் குடும்பத்திற்கே கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அவரது சொந்த ஊரான தென்மேற்கு டெல்லியில் உள்ள தீன்பூர் கிராமம் முழுவதும் முடக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட காங்கிரஸ் முன்னாள் கவுன்சிலர், அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் அம்பேத்கர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தப்லீக் மாநாட்டில் பங்கேற்றவர்களை போலீசார் தேடிவந்தபோது காங்கிரஸ் முன்னாள் கவுன்சிலர் உண்மையை மறைத்துள்ளார். ஒரு கட்டத்தில் அவருக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டு அறிகுறிகள் வெளிப்படையாக தெரிய ஆரம்பித்திருக்கிறது. அவரை சோதித்த மருத்துவர்கள் அவருக்கும், குடும்பத்தினருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பதை உறுதி செய்துள்ளனர்.
தொழில்நுட்ப முறையில் போலீசார் மேற்கொண்ட தேடுதல் வேட்டையில் அவர் சிக்கியுள்ளார்.
தீன்பூர் கிராமத்தில் மொத்தம் 25 வீடுகள் உள்ளன. அவை அனைத்தும் சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும், அத்தியாவசிய பொருட்கள் அரசு பணியாளர்கள் மூலம் கொண்டு செல்லப்படுவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
டெல்லியில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 720-யை கடந்துள்ளது. 12 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 60 சதவீதத்திற்கும் அதிகமானோர் டெல்லி தப்லீக் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்டவர்கள்.
கொரோனா பாதிப்பு அதிகம் ஏற்படும் பகுதிகளாக 22 இடங்களை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் மற்றும் அவர்களது தொடர்புகளை கண்டுபிடிப்பதற்காக 10 ஆயிரம் மொபைல் போன்களை போலீசார் டிரேஸ் செய்துள்ளனர்.