This Article is From Apr 08, 2020

கொரோனா பீதி: ராமாயணத்தை மேற்கோள் காட்டி மோடியிடம் ‘மருந்து கேட்ட’ பிரேசில் அதிபர்!

Coronavirus cases: இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 5,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 149 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பீதி: ராமாயணத்தை மேற்கோள் காட்டி மோடியிடம் ‘மருந்து கேட்ட’ பிரேசில் அதிபர்!

COVID-19 Cases: பிரேசில் நாட்டில் 14,000 பேர் பாதிக்கப்பட்டு, 127 பேர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்திருக்கிறார்கள். 

ஹைலைட்ஸ்

  • பிரேசில் நாட்டு அதிபருடன் மோடி சனிக்கிழமை தொலைபேசியில் உரையாடினார்
  • பிரேசிலுக்கு இந்தியா தேவையான உதவிகளை செய்யும்: மோடி
  • பிரேசிலும் இந்தியாவும் இணைந்து கொரோனாவை வெல்லும்: போல்சனாரோ
New Delhi:

இந்தியா, கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக செயல்படும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் (hydroxychloroquine,) என்னும் மருந்தை ஏற்றுமதி செய்ய வித்தியாசமான முறையில் வலியுறுத்தியுள்ளார் பிரேசில் நாட்டு அதிபர் போல்சனாரோ.

மலேரியாவுக்கு எதிராக பயன்படுத்தப்படும் இந்த மருந்தினால் கொரோனா தொற்றை எதிர்கொள்ள முடியுமா என்று வல்லுநர்கள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். உலகளவில் 70 சதவிகித ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்து உற்பத்தி இந்தியாவில்தான் செய்யப்படுகிறது. 

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக பரவத் தொடங்கிய நிலையில், மார்ச் 25 ஆம் தேதி ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் ஏற்றுமதிக்குத் தடை விதித்தது இந்திய அரசு. ஆனால் இது குறித்து நேற்று மத்திய அரசு தரப்பு, “எந்த நாடுகளுக்கு இந்த மருந்து அதிகம் தேவைப்படுகிறதோ, மனிதாபிமான அடிப்படையில் தேவையான அளவு அனுப்பப்படும்,” என்று முடிவெடுத்துக் கூறியது. 

தற்போது உலகளவில் சுமார் 30 நாடுகள், இந்த ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை உடனடியாக தங்கள் நாட்டிற்கு அனுப்புங்கள் என்று இந்திய அரசை வலியுறுத்தி வருகின்றன.

அதில் பிரேசில் நாட்டு அதிபர் ஜெய்ர் போல்சனாரோ, “பகவான் ராமரின் சகோதரரான லக்‌ஷ்மணனைக் காப்பாற்ற புனித மருந்தை இமாலயத்திலிருந்து பகவான் அனுமான் எடுத்து வந்தார். அதேபோல இயேசு, நோயுற்றவர்களை தன் ஆற்றலால் குணப்படுத்தினார். தற்போது கொரோனாவால் ஏற்பட்டிருக்கும் உலகளாவிய பிரச்சினையை இந்தியாவும் பிரேசிலும் இணைந்து எதிர்கொண்டு வெற்றி பெறும்,” என்று கடிதம் எழுதி ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்து ஏற்றுமதி செய்யுமாறு வலியுறுத்தியுள்ளார். 

முன்னதாக வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் டிரம்ப், “ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை பிரதமர் நரேந்திர மோடியின் அரசு, ஏற்றுமதி செய்யாமல் இருக்குமென்றால் நான் ஆச்சரியப்படுவேன். அவர்தான் அது குறித்து என்னிடம் சொல்ல வேண்டும். நான் பிரதமர் மோடியிடம், ஞாயிற்றுக் கிழமை கூட பேசினேன். அப்போது எங்களின் மருந்துகள் வருவதை அனுமதிப்பதற்கு நன்றி தெரிவித்தேன். அதே நேரத்தில் தற்போது மருந்தை ஏற்றுமதி செய்ய முடியாது என்று அவர் சொன்னால் பரவாயில்லை. அதே நேரத்தில், அதற்கு விளைவுகளை சந்திக்க நேரிடும்,” என்று எச்சரிக்கை விடுக்கும் தொனியில் இவ்விவகாரம் குறித்துப் பேசினார்.

டிரம்பின் இந்த மிரட்டலைத் தொடர்ந்து குஜராத்திலிருந்து அமெரிக்காவுக்கு, இந்த ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்து, 29 மில்லியன் டோஸ்களில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து டிரம்ப், “ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தின் பல லட்சம் டோஸ்கள் வாங்கப்பட்டுள்ளன. 29 மில்லியன் டோஸ்களுக்கு மேல். நான் பிரதமர் நரேந்திர மோடியிடம் பேசினேன். அவரிடம் இந்த மருந்தை அனுப்பச் சொல்லிக் கேட்டேன். அவர் கிரேட். அவர் ரியலி குட்,” என்று ஃபாக்ஸ் செய்திச் சேனலுக்கு அளித்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அதிபர் போல்சனாரோவும் பிரதமர் மோடியும் கடந்த சனிக்கிழமை தொலைபேசி மூலம் தற்போது நிலவி வரும் பிரச்சினை குறித்து உரையாடியுள்ளார்கள். இந்திய தரப்பில் அனைத்து உதவிகளும் பிரேசிலுக்கு செய்யப்படும் என்றும், இரு நாட்டு அரசு அதிகாரிகளும் தொடர்ந்து தொடர்பில் இருப்பார்கள் என்றும் உரையாடலின் போது உறுதியளித்திருக்கிறார் மோடி. 

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 5,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 149 பேர் உயிரிழந்துள்ளனர். பிரேசில் நாட்டில் 14,000 பேர் பாதிக்கப்பட்டு, 127 பேர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்திருக்கிறார்கள்.

.