This Article is From Mar 25, 2020

கொரோனா வைரஸ் ஒழிப்புக்காக 30 சொகுசு பங்களாக்களை அரசுக்கு அளித்த தொழிலதிபர்!!

பெரு நிறுவனங்கள் கொரோனா பாதிப்புக்காக செலவிடும் தொகை, சி.எஸ்.ஆர். எனப்படும் சமூக கடமைகளுக்கான நிதியுடன் கணக்கிடப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

கொரோனா வைரஸ் ஒழிப்புக்காக 30 சொகுசு பங்களாக்களை அரசுக்கு அளித்த தொழிலதிபர்!!

ஓட்டல் அறைகளை விடவும், பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்துவதற்கு பங்களாக்கள் சரியான இடங்களாக இருக்கும் என்று கூறியுள்ளார் தொழிலதிபர்

ஹைலைட்ஸ்

  • கொல்கத்தாவை சேர்ந்த ஹர்ஷ வர்தன் 30 பங்களாக்களை அரசுக்கு அளித்துள்ளார்
  • கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக பங்களாக்களை பயன்படுத்திக் கொள்ள அனுமதி
  • பங்களாக்களை அளித்த தொழில் அதிபர் ஹர்ஷவர்தனுக்கு பாராட்டு குவிகிறது
Kolkata:

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த தொழில் அதிபர் ஹர்ஷவர்தன் நியோடியா தனக்குச் சொந்தமான 30 சொகுசு பங்களாக்களை, கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக மாநில அரசுக்கு அளித்துள்ளார்.

இந்த 30 பங்களாக்களை மாநில அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. சவுத் 24 பர்கனாஸ் மாவட்டத்தில் உள்ள இந்த பங்களாக்கள், இன்னும் ஒரு சில நாட்களில் கொரோனா தடுப்பு முகாம்களாக செயல்படவுள்ளன. 

இதுகுறித்து பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திற்குத் தொழில் அதிபர் ஹர்ஷவர்தன் நியோடியா அளித்த பேட்டியில், 'நாம் மிகவும் நெருக்கடியான சூழலில் இருக்கிறோம். இதனை எதிர்கொள்ள நல்ல அடிப்படை கட்டமைப்பு வசதிகள் நமக்குத் தேவை. நான் 30 பங்களாக்களை அளித்துள்ளேன். பணம் சம்பாதிக்கும் நோக்கத்தோடு இதனை நான் செய்யவில்லை. அரசு இந்த பங்களாக்களைப் பயன்படுத்தி கொரோனா பாதிப்பைக் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம். 

பங்களாக்களைப் பயன்படுத்துவதற்கு எந்த கட்டுப்பாடும் நான் விதிக்கவில்லை. இதனை தனிமைப்படுத்தும் முகாம், மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் தங்கும் அறைகளாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். 

ஓட்டல் அறைகளை விடவும், பாதிக்கப்பட்டவர்களைத் தனிமைப்படுத்துவதற்குப் பங்களாக்கள் சரியான இடங்களாக இருக்கும். ஏனென்றால், ஓட்டல்களைப் பொறுத்தளவில் அறைகள் அருகருகில் இருக்கும். ஆனால் பங்களாக்கள் அவ்வாறு இல்லை.

என்னுடைய நிறுவனம் மருத்துவ பணியாளர்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தித் தருவதற்கும் தயாராக உள்ளது என்று தெரிவித்தார். 

பெரு நிறுவனங்கள் கொரோனா பாதிப்புக்காகச் செலவிடும் தொகை, சி.எஸ்.ஆர். எனப்படும் சமூக கடமைகளுக்கான நிதியுடன் கணக்கிடப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

.