This Article is From Jul 06, 2020

கொரோனா பாதிப்பில் உலகளவில் 3வது இடத்தில் இந்தியா; 7 லட்சத்தை நெருங்கும் பாதிப்பு எண்ணிக்கை!

மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 6,97,413 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், உயிரிழப்பு எண்ணிக்கையும் 19,693ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பில் உலகளவில் 3வது இடத்தில் இந்தியா; 7 லட்சத்தை நெருங்கும் பாதிப்பு எண்ணிக்கை!

ஹைலைட்ஸ்

  • கொரோனா பாதிப்பில் உலகளவில் 3வது இடத்தில் இந்தியா
  • மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 6,97,413 ஆக உயர்ந்துள்ளது.
  • உயிரிழப்பு எண்ணிக்கையும் 19,693ஆக அதிகரித்துள்ளது.
New Delhi:

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஏழு லட்சத்தை நெருங்க உள்ள சமயத்தில், உலகளவில் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளில் ரஷ்யாவை பின்னுக்குத்தள்ளி இந்தியா மூன்றாவது இடத்திற்கு சென்றுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 24,248 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 425 பேர் உயரிழந்துள்ளனர் என்று சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 6,97,413 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், உயிரிழப்பு எண்ணிக்கையும் 19,693ஆக அதிகரித்துள்ளது. 

டெல்லியில் தொடர்ந்து, பாதிப்பு எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வரும் நிலையில், 10,000 படுக்கைகள் கொண்ட கொரோனா பாதுகாப்பு மையத்தில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே, மகாராஷ்டிராவில் தான் அதிகளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து, தமிழ்நாடு, டெல்லி, குஜராத், உத்தர பிரதேசம், தெலுங்கானா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. குணமடைபவர்களின் விகிதமானது 60.85 சதவீதமாக உள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களில் 4,24,433 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

மகாராஷ்டிராவில் நேற்று ஒரே நாளில் 6,555 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். அம்மாநில அரசு ஊரடங்கில் இருந்து அதிக தளர்வுகளைத் திட்டமிட்டுள்ள நிலையில், அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2.06,619ஆக உள்ளது. தொடர்ந்து, உணவகங்களை மீண்டும் திறக்கும் முடிவு விரைவில் எடுக்கப்படும் என்று முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 1,11,151-ஐ எட்டியுள்ளது. இதனிடையே, இன்று முதல் சென்னை தவிர, மாநிலம் முழுவதும் மால்கள் மீண்டும் திறக்கப்பட உள்ளன. தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த தொழில்கள் நிறுவன போக்குவரத்துடன் மீண்டும் திறக்கப்படலாம், எனினும் அதில் 20 சதவீத ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்வதை உறுதி செய்ய வேண்டும். கடந்த சில நாட்களாக சென்னையின் கொரோனா வைரஸ் எண்ணிக்கை சற்று குறைந்துவிட்ட நிலையில், மதுரை நேற்று 303 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

டெல்லியில் நேற்று புதிதாக 2,244 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து, தலைநகரில் பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்தை அடைவதற்கு 556 எண்ணிக்கை மட்டுமே குறைவாக உள்ளது. அதாவது, மொத்த பாதிப்பு எண்ணிக்கை தற்போது 99,444 ஆக உள்ளது. இதில், குணமடைபவர்களின் விகிதம் 71.7 சதவீதமாக உள்ளது. இறப்பு விகிதம் 3 சதவீதமாக உள்ளது. தொடர்ந்து, 25,038 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தெலுங்கானாவில் நேற்று ஒரே நாளில், 1,590 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 12,703 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 285 பேர் உயிரிழந்துள்ளனர். அம்மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 23,902 ஆக உள்ளது. 

கர்நாடகாவிலும், குறிப்பாக தலைநகர் பெங்களூரிலும் கடந்த சில நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை விரைவாக அதிகரித்து வருகின்றன. இதில், பெங்களூரு நகரமே அதிக எண்ணிக்கையிலான பாதிப்புகள் உள்ள மாவட்டமாக உள்ளது. பெங்களூரு மற்றும் கர்நாடகாவின் பிற நகரங்களில் நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதுவரை அங்கு 372 பேர் உயிரிழந்துள்ளனர். 23,474 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, திருவனந்தபுரம் மாநகராட்சி வரம்பில் மட்டும் ஒரு வாரம் கடுமையான, "ட்ரிபிள் லாக்டவுன்" விதிக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கான கட்டுப்பாட்டு விதிகளை அடுத்த ஒரு வருடத்திற்கு கேரளாவில் பின்பற்ற வேண்டும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது. ஜனவரி மாத இறுதியில் இந்தியாவின் முதல் கொரோனா வைரஸ் பாதிப்பை கொண்ட அரசு, இன்றுவரை 5,429 நோய்த்தொற்றுகளை பதிவு செய்துள்ளது.

.