This Article is From Apr 20, 2020

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,000ஐ தாண்டியது!

கொரோனா வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில் கடந்த மார்ச்.25ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,000ஐ தாண்டியது!

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,000ஐ தாண்டியது (File)

ஹைலைட்ஸ்

  • கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,000ஐ தாண்டியது
  • உயிரிழப்பு எண்ணிக்கையும் 543ஆக அதிகரித்துள்ளது.
  • கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,553 பேர் புதிதாக கொரோனாவால் பாதிப்பு
New Delhi:

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,265ஆக உயர்ந்துள்ளது. இதேபோல், உயிரிழப்பு எண்ணிக்கையும் 543ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,553 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் 36 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. 

கொரோனா வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில் கடந்த மார்ச்.25ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, இன்று முதல் பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்தும் விதமாக ஹாட்ஸ்பாட் அல்லாத பகுதிகளில் ஒருசில துறைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக மாநிலங்களுக்கு மத்திய உள்துறை செயலாளர் எழுதிய கடிதத்தில், மத்திய அரசு வழிகாட்டுதலின் படி, விலக்கு அளிக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். கொரோனா வைரஸ் பரவல் குறைவாக உள்ள பகுதிகளில், சில துறைகள் இன்று முதல் இயங்கலாம் என அண்மையில் மத்திய அரசு உத்தரவிட்டது. 

கொரோனா தொற்று என்பது யாரையும் இனம், மதம், நிறம், சாதி, மொழி அல்லது எல்லையைக் பார்த்து தாக்குவதில்லை. எனவே நாம் ஒற்றுமையுடனும், சகோதரத்துடனும் இருக்க வேண்டும். நாம் ஒற்றுமையாக இருக்கிறோம் என பிரதமர் நரேந்திர மோடி தனது ட்வீட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். மேலும், வரலாற்றில் முந்தைய தருணங்கள் போல் அல்லாது, நாம் தற்போது ஒரு பொதுவான சவாலை எதிர்கொண்டிருக்கிறோம். இனி வரும் காலத்தில் ஒற்றுமை என்பது அவசியமானதாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தெலுங்கானா மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவு மே.7ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் அறிவித்துள்ளார். இக்காலகட்டங்களில் கட்டுப்பாடுகளில் எவ்வித தளர்வும் அனுமதிக்கப்படமாட்டாது என்றும், இணைய வழி உணவு விநியோகத்திற்குத் தடை நீட்டிப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இதற்கான முடிவினை மாநில அமைச்சரவைக்குழு எடுத்துள்ளதாகவும், தொடர்ந்து, மே.5-ம் தேதி நிலைமையை மறுபரிசீலனை செய்ய கள நிலவரங்களை அரசு ஆய்வுசெய்யும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் நெருக்கடியை இந்தியா நன்றாக எதிர்கொண்டால் மேலும் சில தளர்வுகள் ஏற்பட வாய்ப்புள்ளது என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பி.டி.ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

14 மாநிலங்களில் உள்ள 54 மாவட்டங்களில் கடந்த 14 நாட்களில் புதிய வழக்குகள் எதுவும் பதிவாகவில்லை என்று மத்திய சுகாதார அமைச்சக அதிகாரி லாவ் அகர்வால் செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.

.