சமூக பரிமாற்றம் ஏற்படக் கூடாது என்பதற்காக மகாராஷ்டிர அரசு தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது.
ஹைலைட்ஸ்
- மகாராஷ்ராவில் ஒரே குடும்பத்தில் 25 பேருக்கு கொரோனா பாதிப்பு
- சவூதியில் இருந்து திரும்பிய 4 பேரிடமிருந்து 25 பேருக்கு பரவியுள்ளது
- சமூக பரவல் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தகவல்
Sangli: மகாராஷ்டிராவில் ஒரே குடும்பத்தில் மட்டும் 25 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. முதலில் 4 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர்களிடமிருந்து எல்லோருக்கும் கொரோனா பரவியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் சங்லி மாவட்டம் இஸ்லாம்பூரை சேர்ந்த ஒரு குடும்பத்தில், 4 பேர் சவூதியில் இருந்து வந்துள்ளனர். அவர்களுக்கு கொரோனா பாதிப்பு கடந்த 23-ம் தேதி உறுதி செய்யப்பட்டது. அடுத்த ஒரு வாரத்திற்குள்ளாக குடும்பத்தில் உள்ள இன்னொரு 21 பேருக்கும் கொரோனா பரவியிருக்கிறது. அவர்களில் 2 வயது சிறுவனும் ஒருவன்.
ஒரே குடும்பத்தில் மட்டும் கொரோனாவால் 25 பேர் பாதிக்கப்பட்டுள்ளது என்பது பெரும் அதிர்ச்சியை அதிகாரிகளுக்கும் மகாராஷ்டிர மக்களுக்கும் ஏற்படுத்தியுள்ளது.
சமூக பரிமாற்றம் என்ற அடுத்த கட்டத்திற்கு கொரோனா பரவல் சென்று விடக்கூடாது என்பதில் சங்லி மாவட்ட நிர்வாகத்தினர் உறுதியாக உள்ளனர். குடும்பத்தில் உள்ளவர்கள் நெருக்கமான இடத்தில் இருந்ததால் கொரோனா எளிதில் பரவி விட்டது என்று மாவட்ட ஆட்சியர் அபிஜித் சவுத்ரி கூறியுள்ளார்.
இதுகுறித்து மாவட்ட மருத்துவ அதிகாரி சலுங்கே கூறுகையில், 'கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் தும்மினால், அதனால் ஏற்படும் எச்சில் துளிகள் அங்குள்ள பொருட்கள் மீது விழுந்து விடும். அந்த பொருளை மற்றவர்கள் பயன்படுத்தும்போது கொரோனா எளிதில் பரவும்.
பாதிக்கப்பட்ட 25 பேரும் ஒரே குடும்பத்தில் உள்ளனர் என்பதால் நம்மால் சுலபமாக சிகிச்சை அளிக்க முடியும். அறிகுறிகள் இல்லாத சிலருக்கும் நாங்கள் சிகிச்சை அளித்து வருகிறோம்' என்று தெரிவித்தார்.
மாவட்ட ஆட்சியர் சவுத்ரி கூறுகையில், 'இஸ்லாம்பூர் மற்றும் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கும் என சந்தேகிக்கப்படும் 325 பேர் இருக்கும் இடத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு கொரோனா தடுப்பு மண்டலம் அமைத்துள்ளோம். சமூக பரவலாக கொரோனா இன்னும் மாற்றம் அடையவில்லை.' என்று தெரிவித்தார்.
நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. இங்கு 215 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 9 பேர் உயிரிழந்துள்ளனர்.