This Article is From Apr 25, 2020

நிலத்தை ரூ. 25 லட்சத்திற்கு விற்று ஏழைகளுக்கு உணவளிக்கும் சகோதரர்கள்!!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 24,506 ஆக உயர்ந்துள்ளது. 775 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் 1,429 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

நிலத்தை ரூ. 25 லட்சத்திற்கு விற்று ஏழைகளுக்கு உணவளிக்கும் சகோதரர்கள்!!

3 ஆயிரம் குடும்பங்களுக்கு சகோதரர்கள் அத்தியாவசிய பொருட்களை வழங்கியுள்ளனர்

Bengaluru:

கொரோனா பாதிப்பால் ஏழை மக்கள் அவதிப்பட்டு வரும் சூழலில் தங்களிடம் உள்ள நிலத்தை ரூ. 25 லட்சத்திற்கு விற்று கர்நாடகாவை சேர்ந்த சகோதரர்கள் 2 பேர் ஏழைகளுக்கு உணவளித்து வருகின்றனர். 

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தை சேர்ந்த தஜம்முல் பாஷா மற்றும் முசம்மில் பாஷா என்ற சகோதரர்கள் வர்த்தகம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா பாதித்த ஏழைகளுக்கு உதவ தங்களது நிலத்தை ரூ. 25 லட்சத்திற்கு விற்றுள்ளனர். இதைக்கொண்டு அவர்கள் உணவளித்து வருகின்றனர்.

இதுகுறித்து தஜம்மல் பாஷா மற்றும் முசம்மில் பாஷா கூறியதாவது- 

கொரோனா பாதிப்பால் ஏற்படுத்தப்பட்ட ஊரடங்கால் தினக்கூலி தொழிலாளர்களும், அவர்களது குடும்பத்தினரும் பசியால் வாடுகின்றனர். எனவே எங்களது நிலத்தை விற்று அதனால் கிடைத்த பணத்திலிருந்து ஏழை மக்களின் பசியாற்ற நடவடிக்கை எடுத்துள்ளோம். 

எங்களது வீட்டின் அருகே மிகப்பெரிய சமையல்கூடம் அமைக்கப்பட்டு சமையல் செய்யப்படுகிறது. இங்கு சமைக்கப்படும் உணவு ஏழைகளுக்கு வழங்கப்படுகிறது. 

எங்களது சிறு வயதிலேயே நாங்கள் பெற்றோரை இழந்து விட்டோம். பின்னர் பாட்டி ஊரான கோலாருக்கு வந்தோம். இங்கு இந்து, சீக்கிய, முஸ்லிம் சமூகத்தினர் எந்தவித பாகுபாடும் இன்றி நாங்கள் வாழ்வதற்கும் வளர்வதற்கும் உதவி செய்தனர். இந்த துயரமான நேரத்தில் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்காக நாங்கள் உதவி செய்கிறோம். 

நிலத்தை விற்பதற்கு அனைத்தும் பேசி முடிக்கப்பட்டு விட்டது. ஊரடங்கு முடிந்த பின்னர் பதிவாளர் அலுவலகம் திறக்கும்போது பணப் பரிமாற்றம் முடிந்து விடும். 

தற்போதுவரை 3 ஆயிரம் ஏழை குடும்பத்தினருக்கு அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை, சானிட்டைசர், மாஸ்க் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கியுள்ளோம். எங்களது தன்னார்வலர்களுக்கு கோலார் மாவட்ட நிர்வாகம் அனுமதி சீட்டுகளை வழங்கியுள்ளது. இதன்மூலம் பொருட்கள், ஏழைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார். தஜம்முல் மற்றும் முசம்மில் ஆகியோர் வாழைப்பழ வர்த்தகம் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகின்றனர். 

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 24,506 ஆக உயர்ந்துள்ளது. 775 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் 1,429 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

.