This Article is From May 14, 2020

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 78,000ஐ தாண்டியது; 3,722 பேர் உயிரிழப்பு!

Coronavirus: கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், புதிதாக 3,722 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 134 பேர் உயிரிழந்துள்ளனர்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 78,000ஐ தாண்டியது; 3,722 பேர் உயிரிழப்பு!

ஹைலைட்ஸ்

  • இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 78,000ஐ தாண்டியது
  • கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், புதிதாக 3,722 பேர் பாதிப்பு
  • இதுவரை கொரோனா பாதிப்படைந்தவர்களில் 2,549 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கையானது 78,003 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், புதிதாக 3,722 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 134 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

மொத்தமாக இதுவரை கொரோனா பாதிப்படைந்தவர்களில் 2,549 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து, வைரஸ் பாதிப்படைந்தவர்களில் 26,235 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது வரை கொரோனா வைரஸ் பாதிப்படைந்தவர்கள் குணமடைபவர்களின் விகிதமானது 33.63 சதவீதமாக உள்ளது என அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ஊரடங்கு உத்தவானது பல்வேறு கட்டுப்பாட்டு தளர்வுகளுடன் தொடர வாய்ப்புள்ளது. கொரோனா வைரஸ் நெருக்கடியை எதிர்த்து போராட பிரதமரின் குடிமக்கள் உதவி, அவசரகால நிவாரணம் அல்லது பி.எம்.கேர்ஸ் நிதியிலிருந்து ரூ.3.100 கோடி பயன்படுத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. 

அந்த தொகையில் ரூ.2,000 கோடி வென்டிலேட்டர்கள் வாங்குவதற்கும், புலம்பெயர் தொழிலாளர்கள் பாதுகாப்புக்கு ரூ.1000 கோடியும், தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு வளர்ச்சிக்கு ரூ.100 கோடி வழங்கப்படும் என பிரதமர் அலுவலகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

கொரோனா வைரஸ் தொற்றால், மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலமாக உள்ள மகாராஷ்டிராவில் 25,922 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு அடுத்ததாக குஜராத்தில் 9,267 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் 9,227 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

மத்திய அரசு நடுத்தர வர்க்கத்தினருக்கும் பல்வேறு நிவாரணங்களை அறிவித்துள்ளது. மக்கள் கையில் அதிக பணப்புழக்கத்தை ஏற்படுத்தும் வகையில், சம்பளம் அல்லாத குறிப்பிட்ட கொடுப்பனவுகளுக்கு டி.டி.எஸ் மற்றும் குறிப்பிட்ட ரசீதுகளுக்கு டி.சி.எஸ் 25 சதவீதம் குறைப்பை அரசு வழங்கியுள்ளது.

டெல்லியின் மிகப்பெரிய மொத்த பழம் மற்றும் காய்கறி சந்தைகளில் ஒன்றான காஸிப்பூர் மண்டியில், அதன் செயலாளருக்கும், துணை செயலாளருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து, சுத்திகரிப்புக்காக இரண்டு நாட்கள் மூடப்பட்டுள்ளது.

இந்த புதிய கொரோனா வைரஸானது ஒருபோதும் நம்மை விட்டு விலகிச் செல்லாது, உலகெங்கிலும் உள்ள மக்கள் வைரஸூடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டியிருக்கும் என்று உலக சுகாதார அமைப்பு நேற்றைய தினம் தெரிவித்துள்ளது. "முதன்முறையாக மனித மக்களிடையே ஒரு புதிய வைரஸ் புகுந்துள்ளது, எனவே நாம் எப்போது அதை வெல்வோம் என்று கணிப்பது மிகவும் கடினம்" என்று உலக சுகாதார அமைப்பின் அவசரகால இயக்குனர் மைக்கேல் ரியான் கூறியுள்ளார்.

உலகையே அச்சுறுத்திக் கொண்டு வரும் கொரோனா வைரஸ் இயற்கையானது அல்ல என்றும், ஆய்வகத்திலிருந்து பரவியது என்று மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். கொரோனா வைரசுக்காக தடுப்பு மருந்துகளை அறிவியலாளர்கள் கண்டுபிடித்து வருகின்றனர். தற்போது அதைத் தடுக்கும் மருந்து ஏதும் இல்லை. அது கிடைத்தால் மட்டுமே பிரச்னையில் இருந்து நாம் முழுமையாக வெளியே வர முடியும். விரைவில் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படும் என எதிர்பார்க்கிறேன். அடுத்த பிரச்னை என்னவென்றால் கொரோனா வைரஸ் ஒருவரை பாதித்திருக்கிறதா, இல்லையா என்பதை கண்டுபிடிப்பது. சிலருக்கு அறிகுறியே இல்லாமல் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே கொரோனா பாதிப்பை கண்டறியும் எளிய வழிமுறைகளை கண்டுபிடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

உத்தர பிரதேசத்தில் நெடுஞ்சாலையில் நடந்து சென்ற புலம்பெயர் தொழிலாளர்கள் மீது அரசு பேருந்து மோதியதில் 6 பேர் உயரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் மேலும், 2 பேர் படுகாயமடைந்துள்ளனர்
என போலீசார் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து, பீகாரை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் பஞ்சாபில் இருந்து தங்களது சொந்த ஊருக்கு நடந்து சென்றுள்ளனர்.இந்த விபத்து குறித்து முசாபர்நகர் மாவட்ட போலீசார் கூறும்போது, நேற்றிரவு 11 மணி அளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. ஆளில்லாத அரசு பேருந்தை ஓட்டுநர் இயக்கி வந்துள்ளார் என்றனர். 

மத்திய பிரதேசத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் பயணித்த லாரி மீது அதிவேகமாக வந்த பேருந்து மோதியதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 54 பேர் வரை காயமடைந்துள்ளனதாக தகவல்கள் தெரிவித்துள்ளன. இந்த விபத்து சம்பவம் குறித்து போலீசார் கூறும்போது, மகாராஷ்டிராவில் இருந்து உத்தர பிரதேசம் நோக்கி 70 புலம்பெயர் தொழிலாளர்களுடன் சென்றுகொண்டிருந்த லாரி மீது அதிவேகமாக வந்த பேருந்து மோதியது. இதில், 8 பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். மேலும், 55 முதல் 60 பேர் காயமடைந்துள்ளனர். அதிகாலை 3 மணி அளவில் இந்த விபத்து
நிகழந்துள்ளது. இதில் லாரியில் பயணித்த பெரும்பாலான தொழிலாளர்கள் உத்தர பிரதேசத்தின் உன்னாவோ மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள் என்று தெரிவித்தனர். 

.